தாலாட்டு ஒன்று கேட்கின்றது

இரவு மௌனங்களை
பரப்பிக்கொண்டிருக்கும் வேளையில்
அந்தச் சிறகுகள் மட்டும்
காற்றுடன் ஏதோ பேசிக்கொண்டிருக்கின்றது
அது எனக்கு ஒரு
ரம்யமான பாடலாகவே கேட்கின்றது

என் புலன்கள் அனைத்தையும்
அது அடிமைப் படுத்திவிடுகின்றது
நான் அந்த ராகத்திற்கு
முழுவதும் அடிமையாகிவிடுகின்றேன்

அறை முழுவதும்
அதன் ஆக்கிரமிப்பு உணரப்படுகின்றது
என் தனிமையையும் அந்த ஒலி
தனக்குள் ஈர்துக்கொள்கின்றது

அயர்ந்துபோன என்னை
ஆசுவாசப் படுத்திக்கொள்ள
சுகமளிக்கும் அதன் ஓயாத பேச்சு
எனக்குத் தேவைப்படுகின்றது
அதனாலேயே நான் அதனை
பேசிக்கொண்டிருக்கச் சொல்கின்றேன்

என் மனமுன் கொஞ்ச நேரம்
எல்லா சுமைகளையும் மறந்து
நினைவுகள் ஏதுமற்றதாகி
நிம்மதிப் பெருமூசுகள் இழுத்தவாறு
அந்த ஒலியின் ரீங்காரத்தில்
சுயம் இழந்து ஒரு தியான நிலை அடைகின்றது

பரபரப்பான ஒரு பகல் வேளையில்
ஓடிக்கொண்டிருந்த என் புலன்கள்
ஓய்வினை விரும்பிடும்போழுது
சிறகுகள் விரித்து காற்றினை பரப்பி
என்னை அணைத்து ஓராயிரம் முத்தங்கள்
இடுவதாகவே நான் உணர்கின்றேன்

அன்னையின் முத்தங்களுக்கு
அவை ஈடு இல்லை என்றாலும்
அந்த விசிறியின் சிறகுகள் சுற்றிடும்பொழுது
எனக்குத் தாலாட்டு ஒன்று கேட்கின்றது...!

எழுதியவர் : வெ கண்ணன் (6-Sep-14, 6:59 pm)
பார்வை : 112

மேலே