இவள் ஒரு நிலைக் கண்ணாடி
பூக்களை கசக்கிய கைகளுக்கு
வாசம் மட்டும் மிச்சமல்ல
அதன் ரணங்களின் வலிகளும்தான்...!
அன்று முதல்
என் பார்வைக்கு
நீயும் ஒரு வேசிதான்...!
எனக்குத்தான் தெரியும்
இங்கு எத்தனை ஆண் வேசிகள்
அலைகிறார்கள் என்று...!
எனக்குத்தான் தெரியும்
இந்த உலகினில் ஆண் வேசிகளே
மிக அதிகம் என்று...!
எவரோ எனக்கு
பூசிச் சென்ற
வேசி என்னும் ரசம்..
அதில் என்னை நீ
பார்க்கின்ற பெயரில்
உன் முகம்தான் பார்க்கின்றாய்...!
இவள் ஒரு
நிலைக் கண்ணாடி...
தேடி வந்து பார்ப்பவனே
அடுத்தமுறை
உன் சுற்றம் சூழ்ந்த
ஏதோ ஒரு சந்திப்பின்
பொதுப் பார்வை பரிமாற்றத்தில்
உன் உண்மை முகத்தினை
உனக்கே நான் காட்டிடும்பொழுது
சட்டென்று முகம் திருப்பிக்கொண்டு
போகிற போக்கினில்
உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
பார்க்க அருவருக்கத்தக்க
அந்த முகம் உன்முகம்தான் என்று...!