கிராமத்து அத்தியாயம்

செம்மண் ரோட்டில் நடந்து
புழுதிக் காற்றை சுவாசித்து
களையான கண்ணாத்தா
களையெடுக்க கிளம்பிட்டா...

தோளுல ஒரு கொழந்தையும்
வயித்தில ஒரு பிள்ளையையும்
சுமந்தபடி நடந்து வந்தா
நெஞ்செல்லாம் பாரத்தோட!!

குடிகார கணவனுக்கு
வாக்கப்பட்டா மகராசி
உழைச்சே ஓடாதேஞ்சா
இதுதானே அவராசி!!

அப்பத்தா கிழவிக்கு
ஒத்தாசை செஞ்சிபுட்டு
சிவகாமி ஆச்சிக்கு
பாத்திரத்தை தேச்சிபுட்டு
பூவாத்தா கன்னுக்கு
கழனிதண்ணி காட்டிப்புட்டு
வயலோரம் நடந்தா
அவ பொழப்ப பாக்க!!

கொண்டுவந்த சீலைய
மரத்திலே தொட்டிகட்டி
சின்னவனை படுக்க வெச்சா
தாலாட்டு பாட்டு பாடி!!

தாலாட்டு இல்ல அது
தன் சோக பாட்டு தானே
பெண்ணாக பொறந்துபுட்டா
தினந்தோறும் வேட்கை தானே!!

சோத்துல கை வெக்க
சேத்துல கால் வெச்சு
சோர்வான பின்னாடி - தன்
சோலி அவ ஆரமிச்சா

கைமட்டும் வேலை செய்ய
மனசு ஏதோ நினப்புல
நாளைக்கு கடன் கேட்க
யார் வருவா வாசலிலே??

தினம் கடன் வசூலிக்க
இவ வாசல் நிரஞ்சாச்சு
பதில் சொல்லி மாளாம
இவ தேகம் மெலிஞ்சாச்சு!!

நேத்திக் கடன் தீர்க்க
பழனிக்கு வேண்டிகிட்டா
நித்தம் அவ கடன் தீர
எந்த சாமிய வேண்டப்போறா?

வேலைய முடிச்சிபுட்டா
கூலிய வாங்கிகிட்டா
மத்தியானம் சோறாக்க
வீட்டுக்கு நடைபோட்டா!!

வீட்டுக்கு ஒரு கண்ணாத்தா
இவ போல பலஉண்டு
வாழுகின்ற வாழ்க்கை மொத்தம்
சோகத்தில் புதையுண்டு!!

எழுதியவர் : ஹரி (11-Sep-14, 3:04 pm)
பார்வை : 127

சிறந்த கவிதைகள்

மேலே