இரவை நேசிக்கும் பூக்கள்

[ முன் குறிப்பு : ஒரு நாள் விழி இழந்தோர் மறு வாழ்வு மையத்திற்கு சென்றிருந்தேன். அங்கு பிறவியிலேயே பார்வை இழந்திருந்தாலும் அவர்கள் நம்பிக்கை இழக்காமல் இருந்ததைக் கண்டு அதிசயித்தேன். அவர்களின் ஒவ்வொரு அசைவுகளும் சொற்களுமே தன்னம்பிக்கை மொழிகளாய் இந்த கவிதையில்...]

இறைவன் வரைந்த ஓவியத்தில்
முற்றுப்பெறாத ஓவியப் பிழை நாங்கள் - ஆனால்
சூரியனுக்கே சவால்விட்டவர்கள்
நீயே வந்தால் கூட
எங்கள் கண்களுக்கு ஒளி கொடுக்க முடியாதென்று...

இருளைக் கண்டு பயந்து ஓடும்
சாதாரண மனிதர்களாய்
எங்களை எண்ணிவிடாதீர்கள்
நாங்கள்
இரவையே நேசிக்கும்
மனித விண்மீன்கள்

கண்ணாடியில் முகம் பார்த்து
தங்கள் அழகை ரசிக்கும்
மனிதர்களுக்குத்தான் தற்பெருமை அதிகம் - ஆனால்
எங்கள் அழகையே பிறர் சொல்லித்தான்
தெரிந்து கொள்கிறோம்
அதனால்
தற்பெருமையைத் தொலைத்துவிட்ட
தனித்துவ தியாகிகள் நாங்கள்...

நாங்கள் நடந்து செல்ல
ஒளிச்சுவடுகள் தேவையில்லை - ஏனெனில்
எங்களுடைய பாதச்சுவடுகளும் ஒளிச்சுவடுகள்தான்...

எங்களுக்கு
இரவிற்கும் பகலிற்கும்
வித்தியாசம் தெரியாது - ஏனெனில்
நாங்கள்
இருளையே சுவாசித்து உயிர்வாழும்
இறைவனின் குழந்தைகள்...

எங்கள் காதல் கூட புனிதமானதுதான் - ஏனெனில்
ஒருவர்க்கொருவர் பார்த்துக் கொள்ளாமலேயே
நேசிக்கின்றோமே....

ஆணவக்காரர்களே
அலட்சியப் படுத்தாதீர் எங்களை...
நாங்கள்
அநீதிகள் நிறைந்த
இவ்வுலகைப் பார்க்க வேண்டாமென்று
ஆண்டவன் வரமளித்த
அதிசயப் பிறவிகள்...!

எங்களுக்கும் உங்களுக்கும்
வித்தியாசம் என்பது இதுதான்
உங்களுக்கு
வெளியே வெளிச்சம் உள்ளே இருட்டு
எங்களுக்கு
வெளியே இருட்டு உள்ளே வெளிச்சம்

உலக அதிசயங்களை
எங்களால் பார்த்து ரசிக்க முடியாது - ஏனெனில்
நாங்களே ஓர் அதிசயம்தானே...

கனவுகளும் கற்பனைகளுமே
எங்களுக்கு பொழுதுபோக்கு
மனிதர்களின் முகங்கள் கூட
பேசும் ஆவிகள்தானே எங்களுக்கு...

மழையே எங்களின்
புனித நீராட்டு
கண்ணாமூச்சியே
எங்களின் தேசிய விளையாட்டு...

ஒன்று மட்டும்
அடித்துச் சொல்வோம்
மனிதர்களில் உயர்ந்தவர்கள்
நாங்கள் என்று - ஏனெனில்
எங்களின் பார்வையில் மட்டுமே
'ஒன்றே குலம் ஒருவனே தேவன் ' !

எழுதியவர் : ஜின்னா (20-Sep-14, 6:18 am)
பார்வை : 576

மேலே