ஊளையிடுவான் கோழை

ஊளையிடுவான் கோழை.

அன்றவன் போனதெங்கே?
இன்றவன் புலம்பலிங்கே.
அன்றவன் சிங்கி தட்டி. .
இன்றவன் கோழையே?

ஆயுதம் பெற்றிருப்பான்
ஆகும்பயன் மறைத்துவைப்பான்.
சாயும் வேளை ஆனபின்னே
சங்கூதுவான் கோழையே?

ஆடைகளைத் திருத்துவதில்
ஆண்மையைத் தொலைத்திருப்பான்.
உழைத்தவன் வளர்ச்சியிலே
ஊளையிடுவான் கோழையே?

அதிகாரம் கொண்டிருப்பான்.
ஆனாலும் ஓய்ந்திருப்பான்.
விதியெனத் தூங்கி விட்டு
சதியென்பான் கோழையே?

துரியோதனம் சேர்ந்திருப்பான்
வெறியாட்டம் போட்டிருப்பான்.
கர்ணனாய்ப் பாவம் செய்வான்
கொலைகாரன் கோழையே!

தர்மங்கள் பேசுவான்
தர்மங்காணக். கூசுவான்.
பீஸ்மனாய் பாவங்கண்டும்
பாராமுகன் கோழையே!

நேர்கொண்டு போர்செய்யான்.
போர்கண்டு நேர்நில்லான்.
பேர்நின்று புகழ்வெல்லான்
கூரன்று கோழையே!

வீரெனென்று முழங்குவான்.
தீரன் கண்டு களங்குவான்.
புறம்கூறி பேதைபோல்
நிறம்மாறிக் கோழையே!

எதிர்வென்று வாழாதான்
இசைந்திங்கு சேராதான்.
இனங்கொன்று வாழ்பவன்
மனங்கொன்ற கோழையே!

தன்னின்பம் தலையென்பான்
மண்சொந்தம் பலிசெயவான்.
பொய்மையில் பொருள்சேர்ப்பான்.
மெய்மையில் கோழையே!

தம்பி எனக் கூவுவான்.
தன்முதுகு காவல் வைப்பான்.
நம்பியாரை நம்பாதான்
என்றும் அவன் கோழையே!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (23-Sep-14, 8:51 am)
பார்வை : 135

மேலே