நந்தினி- தோழியா என் காதலியா
நந்தினி-
.............................................................
"கடவுளால் பூமியில்
"காதலிக்க
"எனக்கென மட்டும்
"அனுப்பப்பட்ட காதல் தேவதை!
................................................................
மன்கையற்கே உரித்தான கார்மேகமென அழகிய கூந்தல்...... செதுக்கிய சங்கைப் போன்ற நீண்ட அழகிய பிறை நெற்றி..... பார்ப்பவர்கள் கண்டுவிட்டு மறுபடியும் ஒரேமுறை...ஒரேமுறை என பலமுறை பார்க்கத் தூண்டும் இரு கண்கள்..... ஆஹா..!! பரதநாட்டியம் முறைப்படி கற்றவர்கள் கூட அவள் கண்ணசைவில் புது நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்..... பலவருடமாய் செதுக்கிச் செதுக்கி மெருகேற்றிய பளிங்குச் சிலையை போன்ற இரு கன்னங்கள்.....அவள் சிரித்தால் அந்தக் கன்னங்களில் விழும் குழிகளுக்கே இந்தியாவை அடகு வைக்கலாம். உதடுகளைப் பற்றியோ, பிற அங்கங்கள் பற்றியோ கூற வேண்டுமானால் புதுக் கவிஞர்கள் பிறந்தாலன்றி...ஊஹும் ..!! கஷ்டம் தான்.....
இந்தப் பெண்ணழகின் பேரழகி என் நெருங்கியத் தோழி தான். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு 'தோழி..தோழி' என்றே மனதில் அடித்தளம் போட்டுப் பழகியும் விட்டேன். அப்படியும் தினமும் ஒருதடவையாவது பேசி விடுவேன் என்னவளிடம்...இல்லை...இல்லை...'என் தோழியிடம்'. இத்தனை அழகான ஒரு பெண்ணை தோழியாக வைத்துக் கொள்ள எனக்கு உடன்பாடு இல்லை தான்.... என்ன செய்ய, புத்தனாக நடிக்க வேண்டிய கட்டாயம் என மனதில் நினைத்து பழகிவந்தேன்.
வானத்திற்கு எப்படி நிலாவோ..... அதைப்போல, எனக்கு நந்தினி......
ஒரு நாள் வெறும் இருட்டில் வெற்றுக் காகிதம் போலத் தூங்கிக் கொண்டிருந்தேன்......
...............................................................................
"நான் காணும் கனவுகள்
"நிஜங்களாவதில்லை என்றாலும்,
"உன்னைக் கனவில் காண்பதை
"மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை
"நான்......!!!
...........................................................................
திடீரென தொலைப்பேசி சிணுங்க எடுத்துப் பேச தூக்கபோதை அனுமதிக்கவில்லை.... முதல்முறை அடித்து ஒய்ந்ததும் தான் மண்டையில் உறைத்தது. காலையில் 'நந்தினி இரவு ப்ரீ-னா கால் பண்ணு'-னு சொன்னாளே என நினைக்கும் போதே மீண்டும் சிணுங்கியது தொலைப்பேசி....நந்தினி தான் பேசினாள்.
"என்னடா பண்ற"- என நந்தினி தான் ஆரம்பித்தாள்.
"வடை சுட்டுட்டு இருக்கேன், எவ்ளோ வேணும்" என கிண்டல் தொனியில் நானும் கூற,
"விளையாடாம சொல்லுடா, என்ன பண்ற??" மறுபடியும் கேட்டாள்.
"நைட்-ல 12 மணிக்கு எல்லாரும் என்ன பண்ணுவாங்களோ அத தான் பண்றேன்" என்று மறுபடியும் கிண்டலாய்க் கூற,
"சரி நீ தூங்கு... நான் வைக்கிறேன்" என்றவளை நான் உடனடியாக தடுத்து,
"ச்சே ச்சே ...சொல்லு பா" என்று விட்டு பேச ஆரம்பித்தது தான்...நீடித்தது அரைமணிநேரப் பேச்சு....,
'அப்புறம் என்ன ....காது மடைகளில்.... இளையராஜா பாடல்கள் ஒலிப்பது போல அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இசையுடன் போட்டிபோட்டுக் கொண்டிருந்தது.
இறுதியில்.
"நீ என்ன லவ் பண்றியா டா" என்று அவள் கேட்ட கேள்வியில் மனதுக்குள் 1000 பட்டாம்பூச்சிகள் பறந்தாலும் ஏன் திடீரென இப்படி கேட்கிறாள் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.
சரி பொதுவான ஒரு பதிலாய் சொல்லலாமே என நினைத்து,
"எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் தானே..." என சொல்லி சமாளித்தேன்.
நான் சொல்வதில் சமாளித்ததைக் கண்டுபிடிதாலோ என்னவோ....... திடீரென பட்டெனப் போட்டு உடைத்தாள்.
"நான் உன்ன ரொம்ப லவ் பண்றேண்டா ...... நீ பண்றியா இல்லையா?? I love you டா..... " என்று சொல்லி விட்டாள்.
அப்புறம் என்ன ..... ஹைய்யோ..... என் காதலெனும் கூரையும் பிரிந்து விட்டது......என் கனவெனும் கண்ணீரும் கசிந்து விட்டது.... என் அறை முழுதும் விண்மீன்கள் வந்து கூடாரமிட்டது...... இளையராஜா பாடல்கள் மொத்தமும் முணுமுணுக்கத் தோன்றியது.....
ஒரு புத்தனைப் போல இருந்த என் வெறுமை மனது, ரோமியோவாய் மாறி காதலில் அடியெடுத்து வைத்தது.....
அழகனைப் போலத் தோன்றியது என் கனாடியில் என் உருவமும்.....'நானும், நந்தினியும் என்றானது என் உலகம்...
காதலிக்கும் நாட்களில் "திருட்டு முத்தங்களும், தினம் சொல்லும் "I love You "-க்களும் , கணக்கற்ற புன்னகைகளும், 'நான் , நந்தினி , என்குழந்தை ' என்ற கற்பனைகளும், அவள் மடியில் படுத்து உறங்கும் குட்டித் தூக்கங்களும்,... அடடா எப்படி போனதென்றே தெரியவில்லை இவ்விரு வருடங்களும்.....
திடீரென ஒரு நாள்.....
"எங்க இருக்க செல்லம்" - நிலா தான்.
"ஆபீஸ்ல" என நானும் சொன்னேன்...
அவள் குரலை வைத்தே அவள் பதற்றமாய் இருப்பதைப் புரிந்து கொண்டேன்.
"என்ன பிரச்சினை பேபி" இது நான்.
"செல்லம், நீ என்ன ஜாதி" என்ற அவள் குரலில் ஒரு பதட்டமும் , ஒரு எதிர்பார்ப்பும்....
" எனக்கு தெரியலையே டா.... இரு அம்மாட்ட கேட்டுட்டு சொல்றேன்... ஆனா .., எதுக்கு திடீர்னு கேக்ற ?? " என்று கேட்டதும்.,
"ஓகே ஓகே " என்று சொல்லி விட்டு வேறு எதுவும் சொல்லாமல் தொலைபேசி கட்டானது.....
'ஏதுக்கு திடீர்னு இப்டி கேக்குறா?' என்று யோசனை எனும் வண்டு மூளையைக் குதறியது....
எதற்கு இப்படி யோசித்து சாக வேண்டுமென திரும்பவும் அவளுக்கு தொடர்பு கொண்டால் , 'நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்போது தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை' என்று வந்தது.... மூன்று முறை தொடர்பு கொண்டும் ஒரே பதில் தான் ...
..................................................................................................
"என்னுடன் பேசி முடித்து
"நீ கிளம்பும்போதெல்லாம்,
"என் அனுமதியின்றி
"உன்னுடன் செல்ல துடிக்கும்,
"...என் இதயம்....
.....................................................................................................
என் காதலி என்னை ஏமாற்றவில்லை
என்னை பக்குவப்படுத்தி இருக்கிறாள்
இதுபோல் இனி யாரிடமும் ஏமாந்துவிடாதே என்று...
.......................................................................................................
சரி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அங்கலாய்க்கும் மனதை ஒருநிலையாக அடக்கிக்கொண்டு நேரடியாக வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் " அம்மா நாம என்ன ஜாதிம்மா" என்று கேட்டேன்.....
அம்மாவும் நிதானமாக ஆனால் விளக்கமான ஒரு பதிலைத் தந்தார், அதாவது, நந்தினியின் ஜாதியை விட மூன்று ஜாதி குறைந்தவர்களாம்.
'சரி, இனி என்ன செய்யலாம்' என யோசித்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு நந்தினியின் வீட்டை நோக்கிப் பறந்தேன்.
"நந்தினி.....நந்தினி" என நான் கேட்டின் அருகில் இருந்து நீண்ட குரல் கொடுக்க,
உட்புறதில்லிருந்து இரண்டு நாய்கள் கேட்டை நோக்கி ஓடி வந்தன. அதற்குப் பின்னால் மூன்றாவது நாயைத் தான் எதிர்பார்த்தேன்... ஆனால், வந்தது நந்தினியின் அப்பா தான்.
"என்ன வேணும்" கோவமாகக் கேட்டார் எனது மாமா சிவந்த கண்களால்....
"நந்தினியப் பாக்கணும்"
"அதெல்லாம் அவ இங்க இல்ல, கண்டவன் எல்லாம் அவளை பாக்க முடியாது"
"ப்ளீஸ் அங்கிள் , ஒரே தடவ பாத்துட்டுப் போய்டறேன்" தீனமான குரலில் கெஞ்சுதலுடன் கேட்டேன்.
"உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா" என்றார் கோவத்தின் உச்சத்தில்
"சரி இட்ஸ் ஓகே" எனக் கூறிக்கொண்டு என் காரின் அருகே வந்தேன்.
அப்போது வாசலின் அருகே நின்றிருந்த நந்தினி அப்பாவின் குரல் கேட்டது..
"ஜாதி குறைஞ்ச நாய்க்கெல்லாம் என் புள்ள கேக்குதா"
கேட்டது மனதில் முள்ளாய்த் தைத்தாலும் அடக்கிக்கொண்டு வந்துவிட்டேன்.
....................................................................
"உன் கோபங்களையும்,
"மௌனங்களையும்,
"நான் படிப்பதற்கு முன்னே
"என்னை விட்டு
"தனிமையில் சென்று விட்டாய் நீ . . .
......................................................................
மூன்று வருடங்களுக்குப் பிறகு,
இப்போது நந்தினிக்கு ஒரு ஆண்குழந்தை இருப்பதாக தகவல்.அவளுக்குப் பிடித்தது பெண்குழந்தை தான் . பாவம் அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை என நினைத்தேன்.
நந்தினி- இப்போதும் என் கூடவே நடக்கும் ஒரு நிழல். அவளை என்னால் பிரித்துக் கூட பார்க்க முடியாது நானே நினைத்தாலும்... என்னை சுற்றிலும் அவளது எண்ண அலைகள் தான்.
ஆபீஸ் முடித்து ஒருநாள் வீடு வந்தேன். வேலைகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
மொபைலில் ஒரு MMS . என் நண்பனிடமிருந்து தான் வந்திருந்தது ஒரு போட்டோ. அதில், நன்றாக உற்றுப் பார்த்தபோது தான் தெரிந்தது படுத்திருந்தவர் நந்தினியின் அப்பா. பக்கத்தில் ஒரு கம்பியில் தொங்கவிடப்பட்டிருந்த இரத்தம் அவர் கைகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டிருந்தது. அந்த இரத்தப்பொட்டலத்தை உற்றுப் பாத்தேன் "Brawin .Y .J " என்றிருந்தது.
உடனே என் நண்பனை தொலைபேசியில் அழைத்தேன். "என்னடா இது Blood Packet -ல என் பெயர் போட்ருக்கு" எனக் கேட்டேன்.
அவனும் "என்ன மறந்துட்டியா, போன மாசம் நீ குடுத்த இரத்தம் தான், பாவம்..!!! யாரோ பிழைச்சு போகட்டும் உன் புண்ணியத்தால... சரி நான் 'Operation Theatre ' ல இருக்கேன்" என்று இணைப்பைத் துண்டித்தான்.
மறுபடியும் நான் அந்த இரத்தப்பொட்டலத்தை உற்றுப் பார்த்தேன். கீழே என் ஜாதியை குறிப்பிட்டிருப்பார்களோ என்று பார்த்தேன் ஒரு எதிர்பார்ப்பில். 'AB +' என்று மட்டுமே இருந்தது.
......................................................................
"காலம் கடந்த பின்னும்
"நடைபெறும் ,
"உன் மெல்லிய நலம் விசாரிப்புகளில்,
"ஏனோ
"உயிர்பெற்றுவிடுகிறது
"என் அசட்டுக் காதல் .....
.....................................................................
இரண்டு நாட்கள் கழித்து ஒரு தொலைப்பேசி அழைப்பு. எடுத்ததும்,
"Brawin ,நான் நந்தினி " என்று என் நந்தினி சொல்லிமுடிக்கும் முன்னமே நான்,
"ஹாய் நந்தினி... எப்படி இருக்கீங்க" என்று கேட்டேன்....
எதிர் முனையில் கொஞ்சம் மௌனத்திற்குப் பிறகு "தேங்க்ஸ் " என்றாள்.
இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவள் குரல் கேட்டதாலோ என்னவோ மறுமொழிக்கு வார்த்தைகள் வருவதாய் இல்லை என நான் உணரும் முன்னே,
"எதுக்கு திடீர்னு தேங்க்ஸ் எல்லாம்..??" என வினவினேன்.
"இன்னிக்கு என் அப்பா உயிரோட இருக்குறதுக்கு காரணமே நீங்க தான், அதான்" என்று கூறியவளின் குரலில் கண்ணீரின் ஈரம்....
எனக்கு பேச்சே வரவில்லை பற்களும் நர்த்தனம் ஆடியதைப் போன்ற ஒரு உணர்வு.
"இட்ஸ் ஓகே" என்று மட்டும் பணிந்தே கூறினேன்.
"அதுமட்டுமில்லை, நீங்க செய்த மிகப் பெரிய உதவிக்கு என் அப்பா உங்களுக்கு ஏதாவது பெரிய கைம்மாறு செய்யணும்னு ஆசைப்படுறார், உனக்கு என்ன வேணும் Brawin " என்றாள்.
இப்போது நிஜமாகவே அந்த மனுசனை கழுத்தை நெரித்து சாகடிகனும் என்றே தோன்றியது. அவள் என்னை விட்டுச் சென்ற கோவத்தை விட இன்று அவள் இப்படி பேசியதும் கோவத்துடன், வெறுப்பும் அதிகமாய் வந்தது. இனியும் இவர்களிடம் பேசினாள் பெரிய பாவம் என்றே தோன்றியது.
"நல்லது நந்தினி...!!! எனக்கு உன்னைத் தவிர எல்லாமே போதுமானதாக உள்ளது, இனியும் உன் அப்பாவுக்கு இரத்தம் தேவைபட்டால் மறுபடியும் கூப்பிடு... ஓகே " என்று விட்டு பதிலுக்கே எதிர்பார்க்காமல் மொபைலைத் தூக்கி எறிந்ததும் மேஜையில் இருந்த நந்தினியின் புகைப்படத்துடன் என் மொபைலும் உடைந்து சுக்குநூறாய்க் கிடந்தது. ஆனாலும் அவசரமாய் நெருங்கிப் பார்த்தேன். நல்லவேளை புகைப்படத்தில் சிரிக்கும் என் நந்தினிக்கு எதுவும் ஆகியிருக்கவில்லை.
.................................................
"மலைச் சரிவுகளில்
"பணிப்புகைக்கு இடையே
"நட்சத்திர விண்மீன்
"என்னவள் முகம்
........................................................
(முற்றும்)