தலைமுறை தேடல் சிறுவர் விளையாட்டு
முடிச்சுப் போட்டு
மூக்குப்பொடி தூவி
மூச்சிறைக்க
ஓணான் பிடித்த
ஒற்றுமையின்று ஓடிப்போச்சு...
வட்டுருட்டி
வாய்க்கால் தாண்டி
வழிநெடுகில் வாய்ப்பாடல்பூண்டு
விழுந்தெழுந்த விபத்துகள்
வீரியம் போச்சு...
பனம்நொங்கு பறித்து
பகிர்ந்தளித்து
பக்குவமாக சக்கரம்செய்து
படபடவென பறந்த பொழுதுகள்
பசுமையாய் ஆச்சு ...
காசுகள் சேர்த்து
கல்கோனா வாங்கி
கடைவாயால் கடித்துடைத்த
காலங்கள் ஏனோ
கரைந்து போச்சு...
சண்டையிட்டு
சவ்முட்டாய் பெற்று
கடிகாரம் கேட்டு
மோதிரம் போட்டு
மீசையும் பெற்ற ஞானம்போச்சு ...
குருவிரொட்டி சுட்டு
குச்சு மிட்டாய் வாங்கி
கும்மிருட்டு வேளையில்
கும்மாளமிட்ட பொழுதுகள்
குறைந்து போச்சு ...
தூண்டில் போட்டு
மீன்கள் பிடித்து
சுட்டுத் தின்ற
சுவைகள் நாவினில்
ஊறிப்போச்சு ...
மாங்காய் பறித்து
மண்சோறு சமைக்க
மாமியாராய் மாறிய
மனங்கள் ஏனோ
மாறுதலாச்சு...
பருவவயதினில்
பல்லாங்குழி வாங்கி
குன்னிமுத்து சேர்த்து
குழியாட்டம் ஆடிய
நினைவுகள் ஏனோ
நின்று போச்சு ...
பொறிகளைப் பூட்டி
ஈசல் ஈர்க்கும்
தைலான் பிடித்த
தைரியம் கொண்ட மனமுமிங்கு
நைந்து போச்சு ...
சிவப்பு பூண்ட
சிறுவுயிர் பிடித்து
பஞ்சுமேனியை
பரிவாய் தடவிய
பாசமின்று பஞ்சமாச்சு...
இருளினை விரட்ட
மின்மினி பிடித்து
மீண்டும் மீண்டும்
வெளிச்சம் கண்ட
விந்தை மனது
விபத்தாய் ஆச்சு ...
தொடைகள் நடுங்கி
தொப்பையாய் நனைந்து
கிணற்றில் விழுந்து
கற்றுத் தேர்ந்த
நீச்சல் வித்தை
நீங்கிப் போச்சு ...
செவிகள் கிழியும்
செல்லாங்குச்சி
பைகள் நிறையும்
கோலிக்காய்கள்
கரங்கள் கோர்க்கும்
கபடிச்சாயல்
கண்களில் ஏனோ
கானல் ஆச்சு ?
பொங்கல் தந்த
மிச்சமாய்
மஞ்சுவிரட்டின்
வீரம் மட்டும்
சாயம் மாறா
சாதனை ஆச்சு ...
நினைவில் எழுந்த
நிஜங்களின் சாரல்
நின்று போகுமோ
தலைமுறை சேருமோ
தவிப்பினில் ஏனோ
நெருடலாய் நெஞ்சம் ...
கதவுபூட்டி
கணினி பழகி
போகோ பார்த்து
பொழுது சாய்ந்தும்
விளையாட மறுக்கும்
பிஞ்சு மனத்தின்
முடுச்சுக்களை
யாரிங்கு அவிழ்க்க ?
பிள்ளையாய்
நாமும் கடந்து வந்த
பாதையில் பெற்ற
பக்குவம் சொல்ல
தன் மழலை தேடும்
தாயுண்டா புவிதனிலே ...
தலைமுறை தோறும்
பருவம் சுமந்த
பொக்கிச பலனை
பரவசமாய் எடுத்துச் சொல்ல
பாரினிலே யார்வரக்கூடும் ...
புதுமையாய் நம்மைவிட்டால் ?
** குமரேசன் கிருஷ்ணன் **