சந்தோசு நான்மணி மாலை
வெண்பா :
முப்பத்து ஆறாம் வயதுக்குள் கால்வைக்கும்
ஒப்பற்ற நல்ல கவிஞனுக்குச் - செப்புகின்றேன்
என்வாழ்த்தை ! அண்ணாஉன் நெஞ்சில் இருக்கின்ற
என்னிடத்தைக் கொஞ்சம் திற !
அகவல் :
திறந்தால் நானும் உன்மனதுக் குள்ளே
பறவையாய் வந்து வாழ்த்து பாடி
என்னுளே நீசெய்த புதுமாற் றங்கள்
தன்னைச் சொல்லி ! உனைக்கட்டித் தழுவி !
வாழ்த்திட வயதில்லை எனினும்
தாழ்ந்து உன்பதம் வணங்கி நிற்பேனே !
கலித்துறை :
நிற்பேனே நானுமே எந்தன்
---நினைவற்(று) உனதழகுப்
பொற்பதம் தன்னைப் பணிந்திட்டு
---பொன்கவி எழுதி!கவிக்
கற்ப கமரமே ! அண்ணனே !
---கற்ப னைக்கடலே !
அற்புத மெய்திடு வேன்உந்தன்
---அன்பும் கிடைப்பதாலே !
அறுசீர் விருத்தம் :
கிடைத்தாலே போதும் உன்கால்
---கீழேஓர் சருகாய்ச் சென்மம் !
அடைவேனே சொர்க்க வாசம்
---ஆருயிர்க்கு மோட்சம் திண்ணம் !
அடைபோலே கவிதைத் தேனை
---ஆர்தேதான் கொடுக்கும் நீயோ
மடைவிட்டு பாயும் வெள்ளம்
---மகிழ்கிறதே எந்தன் உள்ளம் !
-விவேக்பாரதி
__________________________________________________________________________________________
மன்னிக்கவும் அண்ணா உங்கள் பிறந்தநாளான நேற்று என்னால் இஒதனை பதிவு செய்ய இயலவில்லை. இணையம் குறுக்கே வந்து தடையாக வேலை செய்யாமல் போனதே தாமதத்தின் காரணம். சரியான நேரத்தில் பதிய முடியாத வருத்தத்தில் கண்ணீர் வடிய பதிகின்றேன் இந்த நான்மணி மாலையை !