நிலவு
( இணைகுறள் ஆசிரியப்பா )
கறுப்புப் போர்வையில் நீளுடல் மறைத்து
விருப்புடன் முகத்தைக் காட்டும்
பால்நிலா மங்கை ! வெள்ளைத்
தோல்கொண்ட நங்கை
மேகத் தலையணியில்
வேகமாய் காலையில் துஞ்சிடும் ஒளிநிழலே !
ஒளிநிழல் கருங்குழல் தன்னைக் காட்டி
களிப்பினில் ஆழ்திடும் கன்னி
விழித்ததும் துஞ்சிடும் பெண்தான்
குழிகளும் மேடுகளும்
நிறையவே உண்டே
மறைந்தே வளர்வாள் மலர்விரிப் பாளே !
மலர் விரிக்கின்ற மாசில் மடந்தை !
அலர்ந்திடும் அல்லி சொல்லும்
பனிவிழும் இரவின் நாயகி
நனிபசும் துளியை
முகில்விட் டிறக்கி
மகிழ்ந்திடப் புல்மேல் சூட்டிடு வாளே !
-விவேக்பாரதி