பாதையெல்லாம் சோலையாகும்
பாதையெல்லாம் சோலையாகும்
பாவலர் கருமலைத்தமிழாழன்
விழிகள் மூடிப் படுத்திருந்தால்
விடியல் விழிக்குத் தெரியாது
விழித்த விழிக்கே இருள்விரட்டி
விடிந்த ஒளியின் எழில்தெரியும்
வழியா வியர்வை உடலிருந்தால்
வாழ்க்கை இருளில் போய்முடியும்
பொழியும் வியர்வை உடலுக்கே
பொலியும் அழகு வாழ்வமையும் !
வெல்லும் முயற்சி இல்லாமல்
வெற்றி உன்னில் விளையாது
புல்லும் உனக்கு வில்லாகும்
புதிய முயற்சி உனக்கிருந்தால்
அல்லும் பகலும் சோராமல்
ஆற்றும் உறுதி தளராமல்
சொல்லும் செயலும் ஒன்றானால்
சொர்ணம் போல வாழ்வமையும் !
காலை மடக்கி அமர்ந்திருந்தால்
கடந்து போமோ பாதையினை
காலை மாலை மாறிமாறிக்
கடந்து செல்லும் உனைவிட்டே
நாளை என்று கடத்தாமல்
நடக்கக் காலை எடுத்துவைத்தால்
பாலை மணலும் பூக்களாகும்
பாதை யெல்லாம் சோலையாகும் !
*************