உறவுகளை உயிர்ப்பிப்போம்

உறவுகளை உயிர்ப்பிப்போம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

உலகமக்கள் அனைவரையும் கேளிர் என்றே
உறவுகளை உன்னதமாய்க் கணியன் சொன்னான்
நலமாகச் சமுதாயம் நடப்ப தற்கும்
நற்குடும்பம் என்பதற்கும் உறவு வேண்டும்
குலம்தகழைக்கக் குடும்பத்தின் பெயர்நி லைக்கக்
கூடிவாழும் உறவுகளாய்க் கூட வேண்டும்
நிலந்தன்னில் மனிதனோடு மனித னாக
நிற்பதற்கும் கைகோர்க்கும் உறவு வேண்டும் !


தாய்தந்தை பிள்ளையென்றும் உடன்பி றந்த
தம்பியண்ணன் தங்கையக்கா மாமா வென்றும்
வாய்மணக்க அழைக்குமத்தை மகளா மென்றும்
வளர்குடும்பம் தழைக்கவைக்கும் தாத்தா பாட்டி
சேய்பருவத் தோடிணைந்த நண்பர் ; செய்யும்
செய்தொழிலில் பக்கத்து வீட்டி லென்றும்
தூய்மையான அன்புடனே ஊரி லொன்றாய்த்
துடிக்கின்ற உறவுகளாய் இருந்தா ரன்று !


திருமணங்கள் போன்றநல்ல நிகழ்ச்சி கட்குத்
திருவிழாவைப் போலனைவர் ஒன்று சேர்ந்தார்
பெருந்துயர இறப்புகளில் ஊரே கூடிப்
பெருந்தோளில் சுமைதாங்கி உடனி ருந்தார்
பெருமைமிகு அறிவியலின் வளர்ச்சி யாலே
பெருகிவிட்ட பணத்தாசை மனத்தி னாலே
அருகிருந்தும் இன்பதுன்பில் அணைத்தி டாமல்
அலைபேசி தனில்பேசி அந்நிய ரானோம் !

--- 1 -----









சூழ்ந்துவந்து துணையாக நின்ற தால்தான்
சுற்றமென்றே அவர்களினை அழைத்தோம் நாமும்
சூழ்நிலைகள் மாறிப்போய் உறவை நட்பை
சுட்டுதற்கும் நேரமின்றி விலகிப் போனோம்
வாழ்த்திமன மகிழ்ச்சியினைப் பகர்வ தற்கும்
வந்ததுன்ப துயர்களினைப் பகிர்வ தற்கும்
வாழ்க்கையிலே பிடிப்பாக இருந்த அந்த
வலுவான பினைப்புகளை அறுத்து விட்டோம் !

தனிமரமோ தோப்பாகப் பொலிந்தி டாது
தனிமையிலே இனிமைகாண முடிந்தி டாது
தனித்தவிரல் பொருளெதையும் பிடித்தி டாது
தனிமனிதன் சமுதாயம் ஆகி டாது
பனிப்பொழிவு காட்சிகளை மறைத்தல் போல
பகற்பொழுதும் இருளாகும் தனித்தி ருந்தால்
கனிச்சுவையாய் வாழ்க்கையினைச் சுவைப்ப தற்குக்
கலந்தநட்பும் உற்றாரும் இருக்க வேண்டும் !

நாடுதன்னை மீட்டளித்த காந்தி யாரை
நாம்தேசத் தந்தையென்றும் ; தொண்டே வாழ்வாய்
ஈடுசெய்த தெரசாவை அன்னை யென்றும்
ஈரநெஞ்ச நேருவினை மாமா வென்றும்
ஏடுதந்த அவ்வையினைப் பாட்டி யென்றும்
ஏற்றமிகு சான்றோரை உறவாய்ப் பார்த்தும்
வீடுகளில் உறவுகளை ஒதுக்க லாமா
விளைந்தன்பில் கூடுவதே வாழ்க்கை யாகும் !

----- 2 -----.

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (4-Oct-14, 4:58 pm)
பார்வை : 133

மேலே