நதிகளை இணைப்போம்
நதிகளை இணைப்போம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
வெட்சிப்பூ தலைசூடி வேற்று மண்ணை
வென்றெடுக்கப் போர்புரிந்தார் மன்ன ரன்று
கட்சிப்பூ தலைசூடி ஆட்சி யாளர்
களம்நின்றார் ஆறுகளின் உரிமைக் கின்று
புட்கள்தம் நிமித்தங்கள் கேட்ட வாறு
புறப்பட்டார் களம்நோக்கி மறவ ரன்று
வெட்டியான வாய்பேச்சு பகைமை தூண்ட
வெகுண்டெழுந்தார் அணைநோக்கி மக்க ளின்று !
நிலத்திற்காய் நடந்திட்ட போர்கள் மாறி
நிலம்மீது பாய்கின்ற ஆறு கட்காய்
நலம்கேட்டு வாழ்திருந்த அண்டை மக்கள்
நல்லுறவு கெடநாளும் மோது கின்றார்
புலம்பெயர்ந்து தானாகப் பாயும் நீரைப்
புன்மைநெஞ்சால் தடுத்துரிமை பேசு கின்றார்
நலமோங்க இயற்கையன்னை நல்கும் நீரை
நலங்கெடவே தன்னலத்தால் தேக்கு கின்றார் !
வெள்ளத்தால் ஒருபகுதி மூழ்கிப் போக
வெறுந்தரையாய் மறுபகுதி காய்ந்து போகத்
துள்ளிவரும் மழைநீரோ பயனே யின்றித்
தூரத்துக் கடலுக்குள் வீணாய் சேர
கள்ளிப்பால் கொடுத்துப்பெண் சிசுவைக் கொல்லும்
கயவர்போல் மாறிவிட்ட ஆட்சி யர்தம்
குள்ளநெஞ்சில் தூர்வாரி தூய்மை செய்தே
கூறுபோட்ட நதிகளினை இணைப்போம் ஒன்றாய் !
மண்ணோடு விண்தன்னை இணைப்ப தற்கே
மகத்தான அறிவியலில் முயலும் நாமோ
கண்முன்னே ஓடுகின்ற நதிகள் சேர்க்கக்
கலக்காமல் கலவரத்தைத் தூண்டு கின்றோம்
தண்ணீர்க்காய் செந்நீரைச் சிந்து கின்ற
தன்னலத்து வன்முறையை விட்டொ ழிந்தே
தண்மதியும் கதிரொளியும் பொதுமை போல
தண்ணீரை நாம்செய்வோம் செழிக்கும் நாடே !
************