தலைவியின் காத்திருப்பு -3

சித்திரையும் பொறந்துடுச்சி
நித்திரையும் தொலஞ்சிடுச்சி
அம்மனுக்கு காப்புக்கட்டி
சொந்தபந்தம் சேர்ந்துடுச்சி...
வைகாசி பொறந்துடுச்சி
வாகமரம் தழச்சிடுச்சி
வாலாட்டிக் குருவிகளும்
வட்டமேசை போட்டுடுச்சி...
ஆனி பொறந்துடுச்சி
காணி நனஞ்சிடுச்சி
தீனி கெடச்சிதுன்னு
ஆடுமாடு மகிழ்ந்துடுச்சி...
ஆடி பொறந்துடுச்சி
அடுக்களைகள் கொறஞ்சிடுச்சி
மண்ணப் பொன்னாக்க
ஒழவர்ப்படை தெரண்டுடுச்சி...
ஆவணி பொறந்துடுச்சி
ஆசைகள் மொளச்சிடுச்சி
தாவணிச் சிட்டுகளும்
சேலைக்கி மாறிடுச்சி...
பொரட்டாசி பொறந்துடுச்சி
புற்றீசல் கிளம்பிடுச்சி
பொல்லாத ஆசையெல்லாம்
புத்திக்குள்ள புகுந்துடுச்சி...
ஐப்பசி பொறந்துடுச்சி
அத்திமரம் சொரந்துடுச்சி
அத்தான காணாம
அங்கமெளச்சி போயிடுச்சி...
கார்த்திக பொறந்துடுச்சி
கம்மாயும் நெரஞ்சிடுச்சி
வாட (க்) காத்தவள
வாட்டித்தான் வதச்சிடுச்சி...
மார்கழி பொறந்துடுச்சி
மரம்செடிகள் பூத்துடுச்சி
குளிர்ந்தகாலை சூரியனால்
பனித்துளிகள் மின்னிடுச்சி...
தைமாசம் பொறந்துடுச்சி
தமிழ்ப்பொங்கல் பொங்கிடுச்சி
தையலாள் மனதில்மட்டும்
சோகம் பொங்கி வழிஞ்சிடுச்சி...
மாசி பொறந்துடுச்சி
மண்ணெல்லாம் நடுங்கிடுச்சி
மண்பொசுங்கும் உச்சிவேள
மனசு கருகத் தொடங்கிடுச்சி...
பங்குனி பொறந்துடுச்சி
பாவைமனம் கலங்கிடுச்சி
அடுத்தாண்டு வரவ எண்ணி
ஈரல்குலை அறுந்துடுச்சி...
ஓராண்டு அவகாசம்தான்
அத்தமகன் சொன்னதுவாம்
அவன்வரவை காணாமல்
அவளழுது பொலம்புறாளே
அணுஅணுவாய் சாவுறாளே...!
பிரியாராம்.