உணர்ந்து கொண்டால் பயமில்லை

கட்டிலில் படுத்தபடி
கட்டத்தை நொந்தபடி
விட்டத்தை வெறித்தபடி
காத்திருப்போர் பலருண்டு !
வரக்கூடாது என்பதற்கு
வரங்கேட்டு கடவுளிடம்
தரணியில் அனுதினமும்
தவித்திருப்போர் பலருண்டு !
இங்கிருந்தால் என்ன
அங்குபோனாலும் என்ன
எங்கிருந்தாலும் நன்றே
தத்துவம்பேசுவோர் பலருண்டு !
பிடிக்கா விட்டாலும்
முடிவுவேளை வந்துவிட்டால்
துடிக்காது போகவேண்டும்
எண்ணங்கொண்டோர் பலருண்டு !
இருந்தென்ன கிழித்துவிட்டோம்
வருத்தமுற்ற வாழ்வுதன்னில்
சுருக்கிட்டேனும் போய்ச்சேர்வோம்
நொந்துநினைப்போர் பலருண்டு !
மாட்டேனென மறுத்தாலும்
விட்டேனா பாரெனவே
கொட்டமடிக்கும் காலன்வரவில்
பீதியடைவோர் பலருண்டு !
அழைத்தாலும் அழைக்காவிட்டாலும்
அழையா விருந்தாளியாய்
நுழைத்தவனும் எடுத்திடுவான்
வேண்டுமுயிர்ப் பிரித்திடுவான் !
விரட்டிதுரத்தி யடித்தாலும்
இரந்துயமனிடங் கேட்டாலும்
மரணத்துக்கு மரணமில்லை
உணர்ந்துகொண்டால் பயமில்லை !!!