காக்கிச்சட்டையை கைது செய்தவள்
"என்னப்பா சிவா! இன்னைக்கி இவ்ளோ சீக்கிரமா கிளம்பீட்ட"
"இல்லப்பா ஒரு கேஸ் விஷயமா கொஞ்சம் தூரமா போகணும். அதாம்ப்பா. அம்மாகிட்ட சொல்லிடுங்க. நான் கெளம்புறேன்"
"டேய் சிவா! இந்தா, இந்த டீயை குடிச்சிட்டு போ", என்றவாறே சிவாவின் அம்மா அடுக்களையில் இருந்து வந்தாள்.
"அச்சச்சோ! என்னம்மா, எழுந்திரிச்சிட்டீங்களா?"
"அதாண்டா அம்மா", என அப்பா சொல்ல, டீயை வாங்கி குடித்துவிட்டு சிவாவும் கிளம்பினான்.
"என்னங்க, இன்னைக்கி ஒரு வேண்டுதல் இருக்கு. நான் குளிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வந்தர்றேன். கவிதா வந்தா இன்னைக்கு என்ன டிபன் வேணும்னு சொல்லுங்க"
"சரிம்மா", என்றார் சுந்தரம்.
சுந்தரம் அவர் மனைவி கலா இருவரும் ரிட்டையர்டு ஆசிரியர்கள். சிவா ஒரே மகன். போலீஸ் ஆபிஸர். திருமணமே வேணடாம் என அடம்பிடிப்பவன். சிறு வயதிலிருந்தே போலீஸ் வேலை மேல் ஒரு ஈர்ப்பு. அதுபோலவே அந்தக்கனவும் நிறைவேறியது.
கவிதா வீட்டு வேலைக்கு வருபவள். அவளின் அம்மா தான் எப்போதும் வருவார். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், அப்பப்போ கவிதா
வந்து வேலையை முடித்துக்கொடுத்துவிட்டு கல்லூரிக்கு சென்றுவிடுவாள்.
கவிதா வரவும் சுந்தரம், "இட்லியும் புதினா சட்னியும் போதும். செய்துவிட்டு நீ கிளம்புடா", என்றார்.
அவள் சிறுவயதில் இருந்தே வீட்டுக்கு வருவதால் டா போட்டுத்தான் அழைப்பார் சுந்தரம்.
கவிதா அடுக்களையை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.
சிவா திடீரென்று வீட்டுக்கு வந்தான்.
"என்னப்பா?", என்றார் சுந்தரம்.
"இல்லப்பா. போனவேலை சீக்கிரம் முடிஞ்சிருச்சு. அதான் வீட்டுக்கு வந்துட்டு போலாம்னு வந்தேன்", என்று சொல்லிக்கொண்டே "சரோஜாம்மா, நல்லா ஸ்ட்ராங்கா ஒரு காபி எடுத்துட்டு வாங்க", என்று அடுக்களையை நோக்கி கத்தினான் சிவா.
"இல்லப்பா, இன்னைக்கு கவிதா தான் வந்திருக்கா", என்று சொல்வதற்குள் காபியுடன் வந்துவிட்டாள் கவிதா.
நேராக இவனருகில் வந்தவள், அவன் அருகிலிருந்த டேபிளின் மேல் வைத்துவிட்டு சென்றுவிட்டாள்.
சிவா உடனே, "என்னப்பா இது! காபி டேபிளுக்குத்தானா எனக்கில்லையா?", என்றான் சிரித்துக்கொண்டே,
"ஏண்டா, அவனுக்குத்தான் போலீஸ்னாலே பயமாச்சே", என்றார் சுந்தரம்.
ஆனால் சிவாவுக்கு கவிதாவை மிகவும் பிடிக்கும். வேண்டுமென்றே வம்பிழுப்பான். அவள் நிமிர்ந்துகூட பார்க்கமாட்டாள்.
அவள் பார்வைக்காகவே ஏங்குவான்.
காபியை குடித்துக்கொண்டே, "என்னப்பா, அம்மா எங்கே?" என்றான்.
"கோவிலுக்குப்பா!"
"ஓ! ஆரம்பிச்சாச்சா அவங்க வேலையை", என்று கேட்டுக்கொண்டே அடுக்கலைக்கு போனான்.
"என்ன மேடம். இன்னைக்கு காலேஜ் போகலையா"
"ம். போகணும்", என்றாள் தலையை குனிந்து கொண்டே.
"ஏன். அத நிமிர்ந்து பார்த்து தான் சொல்றது", என்றான்.
"டேய் சிவா!", என அப்பா அழைக்க வந்து நின்றான்.
"என்னடா, உன்னோட காதல் எந்த அளவுல இருக்கு?"
"ம், எங்க நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேங்கிறா", என்றான்.
"முயற்சி செய். முடியாதது எதுவும் இல்லை", என்றார்.
சுந்தரம் ஒரு அப்பா போல இல்லாமல், ஒரு நல்ல நண்பனாகத்தான் சிவாவிடம் பழகினார்.
அவருக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை கவிதாவை மருமகளாக ஏற்றுக்கொள்ள, கலாவிடம் தான் எப்படியாது சொல்ல வேண்டும் என முடிவு செய்தார். கலா கோவிலிலிருந்து வந்துவிட, கவிதா வேலை முடித்து கிளம்பினாள்.
"கவிதா இங்க வா", என்றாள் கலா.
"அம்மா!", என வந்து நின்றாள் கவிதா.
"திரும்பு", எனக்கூறி கோவிலில் இருந்து எடுத்துவந்த பூவை அவள் தலையில் வைத்துவிட்டாள்.
சிவா வாசலில் நின்று கொண்டு இருந்தான் அவள் வருகைக்காக.
அவள் வெளியில் வந்ததும் ஓவென கத்தினான்.
"அம்மா", என அலறினாள்.
"ஸ்" எதுக்கு கத்துற என்றான்.
கலாவும் வந்தேவிட்டாள் வாசலுக்கு, "ஏண்டா பயமுறுத்தற அவள?"
"கவிதா! ரொம்ப பயந்துட்ட போல, போ, போயி கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு போ"
"வேண்டாம்மா", என்றவள் கிளம்பினாள்.
சிவா சிரித்துக்கொண்டே உள்ளே வந்தான்.
"என்னடா இது சிவா! ஒரு போலீஸ் ஆபிஸர் மாதிரியா நடந்துக்கிற", என்று அம்மா கலா கேட்க, அது அவன் காதில் விழவேயில்லை. அவள் பயந்து கத்தியதும், அவளின் விழிகளுமே அவனுக்கு இன்பமாக இருந்தது.
"என்னங்க இது?", என்றாள் கணவரிடம்.
"உனக்கு புரியலையா?", என்றார்.
"எனக்கு எல்லாம் புரியுது. ஆனா...", என்று இழுக்க,
"என்ன, தராதரம் பார்க்கிறாயா?", என்றார்.
"இல்லைங்க. கண்டிப்பா இல்ல. கவிதா பத்தி எனக்கு நல்லா தெரியும். சிவா ஒரு போலீஸ். அவ போலீஸ கண்டாலே பயப்படுறா"
"கல்யாணம் பண்ணிவச்சா கண்டிப்பா கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவா"
சரோஜாவிடம் சுந்தரமும், கலாவும் கேட்டனர்.
"அம்மா....", என காலில் விழுந்துவிட்டாள் சரோஜா.
"அம்மா, சின்ன வயசுலேயிருந்தே இங்க தான் வளர்ந்தா. பெரியவளானா. இப்போ படிக்கிற படிப்பு கூட நீங்க போட்ட பிச்சை தான். இதுல நான் என்ன சொல்ல?",
"சிவாவுக்கு கவிதாவ ரொம்ப புடிச்சிருக்கு. கல்யாணம் முடிஞ்சாலும், அவ மேல படிச்சிக்கிட்டே இருக்கட்டும்", என்றனர் இருவரும்.
சரோஜா கவிதாவிடம் பலவிதமாவும் எடுத்துச்சொல்லி சம்மதமும் வாங்கிவிட்டாள்.
அடுத்த நாட்களில் கவிதாவைப்பற்றியே வீட்டில் பேச்சு நடந்தது. அப்போது கலா, "டேய் சிவா! இங்க வா? கவிதாவ ஏன் உனக்கு பிடிச்சிருக்கு", எனக் கேட்டாள்.
"அம்மா! பெரியவளானப்புறம் அவ நம்ம வீட்டுக்கே அதிகமா வர்றதே இல்ல. ஒரு நாள் அவள, மார்க்கெட்ல பார்த்தேன். கத்தி கத்தி பேசீட்டிருந்தா. என்னைய பார்த்ததும், அப்படியே வாய் மூடிட்டா. அப்போ அவ கண்ணத்தான் நான் பார்த்தேன். அந்த பார்வை என்ன அன்னிக்கு முழுக்க தூங்க விடல. அவ வீட்டுக்கு வர்றப்பலாம் அதான் வம்புக்கு இழுக்கறேன். அவ என்னடானா நிமிர்ந்தே பார்க்கறதில்ல"
"அம்மா! அப்பா! ஒங்க இரண்டு பேருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லையே?", என்று கேட்க,
"கண்டிப்பா இல்ல. அவதான் உன் மனைவி", என்றனர்.
"எந்தப்பெண்ணிடமும் இல்லாத ஒன்று
ஏதோ
அது ஏதோ
உன்னிடம் இருக்கிறது",
என்ற பாடலை பாடிக்கொண்டே கனவில் ஆழ்ந்தான் தன் இதயத்தை கைது செய்தவளிடம் இந்த காவல்காரன்.
மீள் பதிவு.