தீபாவளி

பண்டிகை என்றாலே குழந்தைகளுக்கு ஆனந்தம் தான்,அதுவும் தீபாவளி என்றால் புத்தாடைகள், பட்டாசுகள்,இனிப்பு வகைகள் என கொண்டாட்டங்களும் நிறைந்தே வரும். கடைகளிலும், தெருக்களிலும், கண்காணாத தொலைவில் உழைத்து சேமித்த பணத்தில் தன் ஆசை பிள்ளைகளுக்கு அடுக்கடுக்காய் வாங்கி வருவர் அப்பாக்கள்.அம்மாவை பற்றி சொல்லவே தேவையில்ல சாமிக்கு ஸ்பெஷல் பூஜை, வீடு சுத்தம், அது இதுனு முக்கியமாய் அக்கம்பக்கத்தினர் உடன் சேர்ந்து பெரிய எண்ணெய் சட்டியில் பலவித பலகாரங்கள் பக்குவமாய் தயாராகும்.

நான் அப்போது பால்ய சிறுவன்.எங்கள் குழு சாலையில் விளையாடிக் கொண்டே அவரவர் வீட்டில் அவரவர்களுக்கென என்னென்ன வாங்கி குவிப்பார்கள் என பட்டியலிட்டு ஒருவரையொருவர் மிஞ்சிக்கொண்டிருந்தோம்.என் அப்பா தையல் தொழிலாளி,அம்மாவும் கடையில் அப்பாவிற்கு உதவி செய்ய நாள்தோறும் அங்கே இருப்பார் .இரவு அப்பா எனக்காக ஏதாவது தின்பண்டம் வாங்கிவருவார்.மூவரும் ஒன்றாய் நிலவின் மடியில் பேசிக் கொண்டே உண்டு மகிழ்ந்து உறங்குவது வழக்கம்.

தீபாவளி நாள் நெருங்க நெருங்க அப்பா இரவு நேரங்களிலும் வேலை செய்து கடையிலேயே தங்கி விடுவார்.என் ஆவல் அதிகரித்து கொண்டே செல்ல அம்மாவை நச்சரித்து வாறே இருப்பேன்.எனக்கு பொட்டு வெடி கிடைத்தது,அதை நான் கையாலேயே தீத்தி வெடிக்கும் போது என் நண்பர்கள் ரோல் துப்பாக்கி காட்டி சிரிப்பார்கள்.

அது தீபாவளிக்கு முந்தைய தினம்,இனி பள்ளிக்கே செல்ல போவதில்லை போன்ற மனமகிழ்ச்சியில் அந்த ஒருதின விடுமுறைக்காக நாங்கள் உயிர்மூச்சாய் காத்திருந்தோம். ஊரே கோலகலமாய் இருந்தது.வீதீயெங்கும் வெடி சத்தம் தான் ,இன்னும் கொஞ்ச நேரத்தில் வாண வேடிக்கைகள் ஆரம்பித்து விடும்.டபுள் ஷாட் முதல் செவன் ஷாட் வரை பலவித ராக்கெட் வெடிகள் விண்ணை வண்ணமயமாக மாற்றப் போகின்றன.

என் அம்மா என்னை எங்கள் கடைக்கு அழைத்து போனார்கள்.அதிர்சம் செய்தாச்சா என கேட்டுக் கொண்டே நடந்தேன்.எல்லாம் செய்லாம் வா என என்னை விட இரண்டடி முன்னே சென்றார்.அன்றைய இரவை,கருப்பு சாயம் பூசிய அந்த வண்ண இரவினை நான் என் அப்பாவுக்கு உதவி செய்தவாறே தையற் கடையில் கழித்தேன்.தன் மகன் மகளுக்காக வெகு நேரம் காத்திருந்து புத்தாடைகளை பத்திரமாய் எடுத்து சென்றனர் சில தாயுமானவர்கள்.

அவர்கள் பிள்ளைகள் காலை எழுந்த இந்த ஆடைகளை கண்டவுடன் பெறும் ஆனந்தத்தை கண்டு இவர்கள் பூரிப்பார்கள் அல்ல.நானும் அதை கனா கண்டு ஏங்கி ஏங்கி கண்ணயர்ந்து துணி மூட்டைகளின் இடையே உறங்கியே விட்டேன்.காலை எழுந்தவுடன் ஒரு பரவசம்,அட இன்று தீபாவளி இதுநாள் வரை எதிர்பாத்திருந்த பொன்னான நாள்.வீட்டுக்கு போலாமா என்றார் அம்மா.

அப்பா எங்கம்மா என்றேன் ஆவலுடன்.கடைத்தெருவுக்கு போயிருக்காருப்பா,நம்ம வீட்டுக்கு போலாம் வா என்றதும் புறப்பட்டோம்.ஏதேதோ கற்பனை சிறகுகள்,சந்தோஷத்தில் திளைத்தேன்.வீட்டுக்கு போகிற வழிநெடுக்க ஒரு பட்டாசுக்கள்,வண்ண வண்ண ஆடைகள் அணிந்து என் போன்ற சிறுவர்கள் அண்ணன் அக்காவின் துணையோடு வெடி வெடித்து காகிதங்களை தெருக்களில் சிதறடித்தனர்.

டேய் பாத்துடா ரொம்ப பக்கத்துல போகாத என ஒருதாய் மகனை கண்டித்தார்,அவன் அப்பா அவன வெடிக்க விடு என்று அவன் கையை பிடித்து பட்டாசு திரியில் தீயை வைத்தார் ,அவன் கண்களை மூடி அவன் அப்பாவை கட்டிப்பிடித்துக் கொண்டான்.அந்த பட்டாசு சிரித்து கொண்டே வெடித்தது.

என் அம்மாவை பார்த்து லட்சுமி வெடி,யானை வெடி ,நாட்டு வெடி,சரம்னு எல்லாத்தயும் இப்பவே வெடிக்கிறாங்களே,சாயங்காலம் என்ன பண்ணுவாங்கனு கேட்டேன்,அவுங்க அப்பா நிறைய வாங்கி குடுத்துருப்பாங்க என என்வாயை அடக்க முயன்றார் .வீட்டுக்கு சென்றதும் பக்கத்து வீட்டுப்பையன் வாடா வெடி வெடிக்கலாம் என்றான்.இருடா அப்பா வந்துருவாங்க,அதுக்குல்ல எல்லாத்தயும் வெடிச்சுட்டு அப்புறம் எங்கிட்ட கேக்காதே என சீண்டிவிட்டு வீட்டின் உள் நுழைந்துக் கொண்டேன்.

வெகுநேரம் காத்திருந்த பின் அப்பா சைக்கிள் சத்தம் கேட்டது.அப்பா வீட்டினுள் நுழைந்ததும் ஏக்க தவிப்புடனான என் கண்களை பார்த்தார்.அவர் கையில் மிச்சமீதமான ஒரு வெடி கொசுறுகள் மட்டும் இருந்தன.எனக்கு புது டிரஸ் எங்கே என்றேன்.அம்மா அருகில் வந்து கடன்,பாக்கி அது இது என ஏதோ சொல்ல முயன்றார்.என் காதில் எதுவும் விழ தயாராயில்லை.

கதறி அழுது தரையில் விழுந்து கை கால்களை உதறி அழ தொடங்கிவிட்டேன்.அம்மா எவ்வளவு முயன்றும் என் தவிப்பின் வலியை சமாதானம் செய்ய முடியவில்லை. காகித சுருள்களில் அடைத்து வைத்திருக்கும் வெடிமருந்து அழுத்ததால் வெடித்து சிதறும் பிம்பம் மனதில் வந்து கொண்டே இருந்தது.சிகரெட் பற்ற வைத்து ஓரமாய் அமர்ந்த அப்பா எதுவுமே பேசவில்லை, என்ன நினைத்திருப்பாரோ மனதில்..

அன்று நான் எதுவும் உண்ணவில்லை,அழுது வடிந்த என் கன்னங்களை தொட்டு கூட பார்க்கவில்லை.ஒரு பாம்பு மாத்திரை பொங்கி எழுவது போல நான் மிகவும் வெம்பி போயிருந்தேன்.தீபாவளி அன்று கூட வெடிக்காத பட்டாசாய் நான் தனித்திருந்தேன்.ஆனந்த பரவசமாய் துள்ளி எழும் புஸ்வானமும்,பாவடை சட்டையாய் வட்டமிடும் சங்கு சக்கரமும்,சிந்தி தெறிக்கின்ற புன்னகை போல கம்பி மத்தாப்பும் என்னிடமிருந்தும் நான் தொடவில்லை.

மறுநாள் காலை வழக்கம் போல பொழுது விடிந்து தூக்கம் கலைந்தது என் கனவு கலையவில்லை.எனக்கு பள்ளிக்கு செல்லவே தயக்கமாய் இருந்தது,எல்லோரும் புத்தாடை அணிந்து அணிவகுப்பர்,நானெங்கு ஒளிந்து கொள்வது.பெற்றோரிடமிருந்த கோபம் பள்ளி செல்ல வைத்தது.எண்ணியது போல ரங்கோலி கோலமாய் பள்ளி அலங்காரம் கொண்டது.

வகுப்பறையில் ஆசிரியர் புன்னகையான வசிகரத்துடனே உள்நுழைந்தார்.முதல் வேலையாய் அவர் ஒவ்வொருவராய் எழ சொல்லி அவரவர் பண்டிகை கொண்டாட்டத்தை பற்றி விவரிக்க சொன்னார்.அவரது பரவசம் மற்ற மாணவர்களையும் தொற்றிக் கொண்டது.ஊதுபத்தியில் ஆரம்பித்து தீக்காயம் வரை பேசி சாம்பலாக்கினர்,சிலர் ஒரு வார கதையெல்லாம் சொன்னார்கள்,அய்யோ என்முறை வரப்போகிறதே நான் என்ன பொய் சொல்வேன்,நண்பர்களிடம் சொன்னதை சொல்லவா,இல்லை வேறு எதாவது,ஒன்றும் வேண்டாம் உண்மையை சொல்வோம்.ஒருவாறு என் மனதை சமாதனப் படுத்தியும் படபடப்பை அடக்க முடியவில்லை.எனதருகில் இருந்தவனும் புராணம் பாடிவிட்டான்.ஆசிரியர் என்னை பார்த்தார்,எல்லோரும் திரும்பி பார்க்கும் முன்னரே ஏதும் சொல்லாமல் எனக்கடுத்து இருந்தவரை எழுப்பி அவர் அனுபவம் கேட்டுரசித்தார்.

வகுப்பு முடியும் தருவாயில் அவர் கண்களை என்னை வாழ்த்தின ,மனத்தாலே அவருக்கு நன்றி உரைத்தேன் ,அவர் தன் பால்யத்தை நினைத்து கொண்டு விலகி சென்றார்.நானும் தமிழகத்தில் பிறந்தவனாயிற்றே,நாட்கள் செல்ல ,மெல்ல பழையன மறக்க முயன்று என் தாய் தந்தையுடன் பேசி உண்டு இயல்பானேன்.அன்று இரவெல்லாம் அம்மா அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.நிறைய கவலைகள்,பாவனைகள்,கடைசியாக ஒரு புன்னகை.

அன்றைய தினம் காலைப் பொழுதில் நான் விரைவாக எழுப்பப் பட்டேன்,இன்னிக்கு ஸ்கூல் லீவு போட்டுடலாம்.சரியா நாம வெளிய போறோம்.ம்ம் என்றவாறே விரைவாக கிளம்பினேன்.அப்பா அன்று ஒரு நல்ல ஆடை அணிந்திருந்தார்.அம்மாவி சேலை நேர்த்தி ஒரு தனியழகு.பேருந்தில் ஏறி பட்டணத்திற்கு போனோம்.பிரசித்தி பெற்ற அந்த கோவிலில் தரிசனத்தை முடித்து விட்டு ஒரு ஷேர் ஆட்டோவில் சென்று இறக்கினோம்.

அப்பா என் கையை பிடித்து அங்கிருந்த அங்காடி தெருவுக்கு அழைத்து சென்றார்.எங்கு பார்த்தாலும் ஒரே ஆடைகள் சொர்க்கம், வர்ண ஜால வீதியில் என் உலகம் கடைவிரித்திருந்தது.அதில் ஒன்றினுள் ஆரவாரமாய் நுழந்தோம்.அங்கிருந்த ஆடைகளில் உனக்கு வேண்டியதை தேர்ந்து எடுத்துக்கொள் என் சொன்னது தான் நேரம்,நான் ஆடை பெர்முடாவில் மறைந்தே போனேன்.அம்மாவுக்கு சேலை வாங்கிட்டு இருந்த அப்பாவ கூப்பிட்டு இந்த டிரஸ் எனக்கு சூப்பரா இருக்கும்ல என சொன்னேன்.நானே கொஞ்சம் யோசித்து விலை அதிகமா இருக்குமாப்பானு கேட்க என்னை தடுத்து அதன் விலையை கூட பாராமல் கேட்டார் உனக்கு பிடிச்சிருக்குல ..

நாங்கள் புத்தாடை பைகளுடன் வெளியே வந்து ஹோட்டலுக்கு சென்று ஊஞ்சல் ஆடி ஆனந்தமாய் மகிழ்ந்தோம்,சரிவுபலகையில் சரிந்து எழுந்து டவுசரை சரிசெய்த போது வாய்விட்டு சிரித்தார் என் அம்மா,அப்பாவின் இதழோரமும் லேசாய் கசிந்தது அந்த சிரிப்பலை.மாலை மற்றுமொரு கோவிலுக்கு சென்று அர்ச்சனைகள் செய்துவிட்டு இரவுக்குள் பரிவர்த்தனமாய் வீடு திரும்பினோம்.

வாங்கி வந்த இனிப்பு பண்டங்களாய் எல்லாம் ஒவ்வொன்றாய் பிரித்து எடுத்தோம்.சமையல் அறையில் பஜ்ஜி ,அதிர்சம் எல்லாம் தயார்நிலைக்கு வந்துவிட்டது.சிரித்து சிரித்து மகிழ்ந்த செல்லத்தை தடவி கொடுத்தார் தாய்.ஆமா எல்லாம் சரி ஆனா ஏம்மா இன்னிக்கு இதெல்லாம்.என் கேசம் வருடியபடி மெல்ல சொன்னார்,கண்ணா நமக்கு என்னிக்குமே பண்டிகை தான்டா ,உனக்கு வேண்டியதெல்லாம் செய்யனுக்கிறது தான் என் ஆசை.புரியாமல் போய் படுத்துக்கொண்டேன்.

மறுதினம் என் உடலெல்லாம் உற்சாகம் பரவ அந்த புத்தாடையை வருடி தொட்டேன்.அவசர அவசரமாய் குளித்து முடித்து வந்தேன் .சாப்பிட்டு கூட இறங்கவில்லை.மனம் தவித்து துடித்தது இந்த பொக்கிஷ ஆடையை உடனே அணிந்த கொள்ள.டேய் மணி இன்னும் ஆகலடா இருன்னு காத்திருக்க வைத்தார் தாய்.கடிகார முள்ளை கவனிக்கும் போது தான் தெரிகிறது நேரம் எவ்வளவு நிதானமாக செல்கிறது என்று.அம்மா இன்னைக்கு சிக்கிரம் போறேனு சொல்லி ஆவல் தாங்காமல் உடனே சென்று அணிந்து கொண்டேன்.அம்மா கவனிக்காதது போல திரும்பிக்கொண்டார்.

பேரன்பு கொண்ட அம்மாவுக்கு டாடா சொல்லிவிட்டு பெருமிதத்தோடு பள்ளியினுள் நுழைந்தேன், வனமலர்களில் தனி ரோஜாவாக ,புத்தாடை அணிந்த ராஜாவாக.நண்பன் முதல் ஆசிரியர் வரை கேட்டனர் ,என்னடா பிறந்த நாளா என்று, புறநகையோடு சொன்னேன் ' தீபாவளி '

எழுதியவர் : (7-Oct-14, 8:39 pm)
சேர்த்தது : க.சண்முகம்
Tanglish : indru theebavali
பார்வை : 439

மேலே