எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் --- விரல் மாறும் தொடர்கதை பாகம்-12 - சொ-சாந்தி
நள்ளிரவு எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சமயம் எவர் ஸ்மைல் தூக்கு போட்டுக் கொண்ட விடயம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
விடியற்காலை 5 மணி.
சரஸ்வதிக்கு தூக்கம் கலைந்து புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். விழிகள் மட்டும் மூடியபடியே இருந்தது.
"என்ன தூக்கம் வரலியா. பாப்பா தொந்தரவு குடுக்குதா"?? எவர் ஸ்மைல் குரல் ஒலிக்கவே கண் விழித்த சரஸ்வதி திடுக்குற்றாள். அங்கு எவருமே இல்லை. வியர்த்து கொட்டியது. இனம் புரியாத பயம் வந்து உடலில் சிறிது நடுக்கத்தை ஏற்படுத்தியது. பயத்துடனேயே கட்டிலைவிட்டு மெதுவாக எழுந்து பாத் ரூம் பக்கம் செல்ல எத்தனித்தவள் எவர் ஸ்மைல் அறையைக் கடக்கும்போது அந்த காட்சி கண்ணில் பட்டது. அறை முழுவதுமாய் திறந்து கிடக்க அவள் கண்ட காட்சி அலற வைத்தது. அங்கே மின் விசிறியில் எவர் ஸ்மைல் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள்.
" ஐயோ அக்கா, இப்பிடி பண்ணிட்டியே, ஐயோ,, ஐயோ.. நைட் கூட நல்லாதானே பேசி சிரிச்சிக்கிட்டுதானே இருந்தீங்க. என்ன ஆச்சு.. ஜீவா... கமலி... எல்லாரும் அக்காவ பாருங்க. நம்மள நிற்கதியா விட்டிட்டு போய்ட்டாங்க" அக்கா ஐயோ அக்கா..."
சரஸ்வதி அலறி அழுது கூப்பாடு போட்ட சத்தத்தில் அந்த பெரிய ஹாலில் உறங்கிக் கொண்டிருந்த ஜீவா, சூர்யா மற்றும் அனைவருக்கும் உறக்கம் கலைந்து என்ன நடந்தது என்று உணரமுடியாமல் பீதியுடன் எழுந்து வந்து நிலைமையை உணர்ந்த போது அலறல் சத்தமும் அழுகை சத்தமுமாக வீடே அமளி துமளிபட்டது.
மின்விசிறியில் தொங்கிக்கொண்டிருந்த எவர் ஸ்மைலின் நாக்கு வெளியே துருத்திக் கொண்டும் விழிகள் பிதுங்கியும் பார்ப்பவரை மிகவும் பயமுறுத்திக் கொண்டிருந்தது. கீழே நாற்காலி ஒன்று விழுந்து கிடந்தது . தூக்கு மாட்டிக் கொள்ள அதனை பயன் படுத்தி இருக்க வேண்டும் . தூக்கு மாட்டிய பின்பு உயிர் போகும் போராட்டத்தில் கால்களை இங்குமங்குமாக உதறுகையில் அந்த நாற்காலி விழுந்திருக்க வேண்டும் .
அந்த நாற்காலியை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு எவர் ஸ்மைல் ஐ தொங்கிக் கொண்டிருந்த கயிற்றிலிருந்து விடுவிக்க ஜீவாவும் சூர்யாவும் எத்தனிக்கையில்
ஜீவா.. தொடாதே.. தொடாதே.. உங்க பிங்கர் பிரிண்ட்ஸ் இருந்திச்சின்னா நீங்க ரெண்டு பேரும் தான் கொலை செஞ்சதா ஆயிடும். ஏற்கெனவே நெறைய சிக்கல். பொறு... பொறு.."
சரஸ்வதி கதறவும் ஜீவாவும் சூர்யாவும் தங்கள் செயல்பாடுகளில் சற்றே பின் வாங்கினர். சரஸ்வதி சொல்வதிலும் உண்மை இருக்கிறது. அவசரத்தில் தாம் செய்யவிருந்த தவறினை உணர்ந்தார்கள்.
பட்டவன் காலிலேயே படும். கெட்ட குடியே கெடும் என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள். ஏற்கெனவே என்ன பாவம் செய்தார்களோ இப்படி குடும்பத்தை விட்டு உறவுகளை விட்டு நிம்மதியை விட்டு என்று எத்தனையோ விட்டு..விட்டு அவதிக்கு மேல் அவதியில்... அவதிகளுக்குள் சிக்கி உழல் வதற்கென்றே படைக்கப்பட்டவர்களாய். தொடர்ச்சியாய் பிரச்சினைகள் துரத்திகொண்டே இருக்கிறது இவர்களை...
எல்லோரும் கூடி ஒரு நல்ல வழியில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நினைக்கையில் என்ன ஒரு துரதிர்ஷடம்?? இதைத்தான் விதி என்பார்களோ ?? புரிவதில்லை . எதுவும் புரிவதில்லை. என்னென்னவோ நடக்கும் . எப்படி எப்படி எல்லாமோ நடக்கும். காரணங்கள் அறிய முடிவதில்லை. அப்படிதான் இதுவும். ஒரே குழப்ப நிலை...
ஜீவா காவல் நிலையத்திற்கு தன் அலை பேசியின் மூலம் தகவல் அளித்தபோது அழுகை வெடித்து சிதறியது . தொண்டையடைக்க செய்தியை தெரிவித்துவிட்டு அடுத்து எவர் ஸ்மைல் அண்ணிக்கு தகவல் அறிவித்தபோது அவர்கள் கதறிய கதறல் வயிற்றை புரட்டி எடுத்தது.
===================================================================================
காவல் நிலையம்
காலை நேரம் 8.00 மணி
இன்ஸ்பெக்டர் ராமபத்ரன் அவசர அவசரமாக புறப்பட தயாராகிக் கொண்டிருந்தார்.
"தியாகு சூசைடு கேசா இல்ல மர்டர் கேசான்னு சரியா தெரியலே. போய் விசாரிச்சாதான் எதுவும் தெரியும். எங்கன்னு சொன்னே." இன்ஸ்பெக்டர் ராமபத்ரன் இப்படி கேட்கவும்
"இங்க இருந்து அந்த இடம் 3 கிலோ மீட்டர்தான் சார்".
"அட்ரஸ் நோட் பண்ணி வெச்சிருக்கியா?"
"ம்ம்ம். போன்ல கம்ப்ளைன்ட் வந்தப்பவே கேட்டு நோட் பண்ணி வெச்சிட்டேன். கூறிக்கொண்டே சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு துண்டு காகிதத்தை எடுத்து காட்டினான் கான்ஸ்டபில் தியாகராஜன் .
இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும் காவல் நிலையத்தை விட்டு வெளியேற நினைக்கையில் ...
"சார் இவங்க நாலு பேரை யும் என்ன செய்யறது? எப்.ஐ.ஆர் போட்டுடவா" கான்ஸ்டபில் ஜானி இப்படி கேட்கவும்
"காலங்காத்தால இவளுங்கள வேற புடிச்சி கொண்டாந் திட்டியா?? கஷ்டம் டா." தலையில் அடித்துக் அடித்துக் கொண்டார் அந்த இன்ஸ்பெக்ட.ர்
"வேணாம் யா. எப்.ஐ.ஆர் போட்டா இவளுங்கள ரிமான்ட்ல வெக்க வேண்டி இருக்கும். எங்க இருந்தாலும் இவளுக எடத்த நாரடிச்சுடுவாலுக. அதனால நாலு பேருக்கும் எப்பவும் நடத்துற சம்பிரதாயத்த நடத்திட்டு வெளியில விட்ரு. தலை முடி வளர்ற வரைக்கும் கொஞ்ச நாளக்கி தொழில் நடத்தாம இருப்பாளுக.
இவளுங்களால நம்ம ஸ்டேஷனுக்கு கெட்ட பேரு. இது மாதிரி பிராத்தல் பொம்பளைங்க பெருத்து போனதால நெறைய VD (Venereal Disease) நோய் பிடிச்சு ஜி ஹெச்ல நெறைய கேசு வருதாம். ஹாஸ்பிடல்ல இருந்து நம்மள கேள்வி கேக்குறாங்க. பிராத்தல் கேச புடிக்காம என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்கன்னு. இவளுங்களுக்கும் ஒரு முடிவு கட்டி ஆகணும் . இல்லேன்னா நம்ப பேர் ரிப்பேர் ஆயிடும். இந்த வாரத்திலேயே 5 மர்டர் கேஸ். இன்னும் 3 கேசுல யாரு கொலையாளின்னு கண்டு பிடிக்க முடியல. இந்த நேரத்துல இவளுங்கள டீல் பண்ண முடியாது. அப்புறம் பாக்கலாம்.
சரி நேரமாச்சு. நான் சொன்னத பாலோ பண்ணிக்க. மொட்டை அடிக்கிறவனுக்கு குடுக்க இந்த ரூபா வெச்சிக்க" என்று சட்டை பாக்கெட்டிலிருந்து இரண்டு 100 ரூபாய் நோட்டுக்களை ஜானியிடம் கொடுக்கவும் அவன் அதனை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டான் . எப்படியும் ஜானி அதில் 50 ருபாய் கமிஷன் பெற்றுவிடுவான் .
ஜானிக்கு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துவிட்டு காவல் நிலையத்தை விட்டு இன்ஸ்பெக்டரும் தியாகுவும் வெளியேறினர்.
============================================================================================
சூர்யாவின் எண்ணத்தில் திடீரென்று எதோ மின் பொறி தட்டியது போல் ஒரு யோசனை. . எவர் ஸ்மைலின் அறையில் தேடலானாள். அவள் இறப்பதற்கு முன்பாக ஏதாவது கடிதம் எழுதியிருப்பாளோ?? ஏதாவது கிடைக்கிறதா என்று. ஷெல்ப்.. டேபிள் என்று தேடி அடுத்து தலையணையை எடுத்தபோது அதன் அடியில் அது கண்ணில் பட்டது. நான்காக மடிக்கப் பட்டிருந்த அந்த வெள்ளை காகிதத்தை எடுத்தாள். அது எவர் ஸ்மைலின் மரண வாக்கு மூலமாக இருந்தது. அதனை படிக்க ஆரம்பித்தபோதுதான்
இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும் அந்த வீட்டினுள் நுழைந்தனர்,,,
=======================================================================================
தொடரும்.....
ஐயோ... என்ன நடக்கும்னே ஒண்ணுமே புரியலையே... சீக்கிரமா யாராவது இதுக்கு ஒரு முடிவு கட்டுங்கப்பா...