முதுகெலும்பி 3

முதுகெலும்பி 3
பெரியபாண்டி....
அம்மாச்சி சொல்லச் சொல்ல எனக்கு இடிவிழுந்த தென்னங்குருத்து பொகையுமே.. அந்தாப்புல அதிர்ச்சியா இருந்துச்சி.. அஞ்சி வருசத்துக்கு முன்னாடி மீனுமுள்ளு மாட்டி விக்கிகிட்டுச் செத்துப்போன ஊத்தக் கெழவனா இம்புட்டு பெரிய வேலைக்காரன்..? (எங்ககூட கிண்டல் பேசி வெளையாடும் போதெல்லா அவர நாங்க அப்பிடித்தே சொல்லுவம்... அம்மாச்சிக்கிட்ட சொன்னா.. சுண்ணாம்ப அள்ளி கண்ணுல மொழுகிரும்)... அவகளா அம்மாச்சி..? ன்னு கேட்டு வெச்சேன்...
இனி அம்மாச்சி சொன்னது.....
நீயெல்லா இப்ப என்னடா தளுக்கு பண்ற.. எஞ்சாமி வரும்பாரு அப்ப.. ஒத்தக்குருத வண்டில... முறுக்கி ஏத்துன மீசையும் முண்டா பணியந் தெரியிற சிலுக்கு சிப்பாவுமா... அப்பிடி ஒரு கம்பீரம் டா..எதுக்கால வார எஞ்சோட்டுப் பொண்டுக எல்லாம் இவுக பாக்கனுமின்னே கொண்டைய ஏத்திப் போட்டுகிட்டு துள்ளித்துள்ளி நடப்பாளுக.. சிறுக்கி மகளுக...!! இவுகமட்டும் என்ன சாமானியப்பட்டவுகளா..? கடலுன்னா வஞ்சிரமும் .. கொளமுன்னா கெண்டையும்தா தேடுவாக.. பொடுசு போட்டெல்லாம் கண்டுக்கிற மாட்டாக..நல்லா சுண்ட வச்ச வத்தக்கொழம்பு மாதிரி சுர்ர்ர்ரன்னு இருக்கணும் அவுகளுக்கு.. ஆனா நியாயத்துக்குபொறம்பா.அடாவடிக்கெல்லாம் போற ஆளு இல்ல அவுக. தானா போக மாட்டாக... வாறத விடமாட்டாக..
ஒருதடவ பட்டுக்கோட்ட சந்தையில கோழிவிக்கவந்த ஒரு புள்ள சீலயப் புடிச்சி இழுத்த ஒரு பெரிய போலீசையே பொரட்டி எடுத்துப்புட்டாகளாம்... இஞ்சி நைக்கிற மாதிரி அவன நச்சி அவக சொன்ன “ புடிக்காதுன்னா புருசனா இருந்தாலும் தொடப்புடாதுடா.. நீ போலீசுன்னா பொசுக்குனு விழுந்துருமோ .... எத்துற எத்துலஒங் கொ........ தெறிச்சிரும் பாத்துக்க”ன்னு அவுக விட்ட வார்த்தைக்கி மொத்த கூட்டமும் ஒத்த வார்த்த பேசலையாம்..
நாகூட இந்த ஊருக்கு ஆட்டமாட வந்தவதே.. ஒரு நட்ட நடுராத்திரி வளர்பொறையில ஐய்யனார் திருவிழா.. எஞ்சோடி ஆட்டக்காரப்பய கள்ளுமொந்த குடிச்சி களைச்சி மல்லாந்துட்டா.. சாமி ஊர்வலம் வருது...என்னபண்ண....? வேட்டிய மடிச்சி எனக்கு சோடியா எறங்குனாக பாரு...அம்புட்டு கூட்டமும் சொக்கித்தா போச்சி... அப்புறமென்ன.. பச்ச நோட்டெடுத்து பசக்குன்னு குத்துனாக... பசயா நானும் அவுகளோடவே ஒட்டிக்கிட்டேன்...
ஒண்ணு மட்டும் சத்தியமுடா... என்னச் சேத்ததுக்கு அப்புறம் அவுக மூத்தாளு.. அத விட்டா நானு.. வேற எங்கினயும் கஞ்சி குடிக்க மாட்டாரு... நானும் ஆடுன கடேசி ராத்திரியும் அதுதேன்... என்னதா கொடுமழையா இருந்தாலும் மழெக்கி அப்பறம் ஈரஞ்சொட்டுமே மரம். அந்த மாரிதே அவுகளும் நானும். அவுக மூத்தாளும் “ மனுச எங்கங்கயோ உருண்டு பொரண்டுச்சே...இப்பவாச்சும் இங்கின ஒரு எடமா கெடக்கே”ன்னு ஒண்ணுஞ் சொல்லமாட்டாக...அந்த புண்ணியவதிக்கு நாஞ்செஞ்ச துரோகமோ பாவமோ எனக்கு மடி நெறயல.” கொஞ்சமா அழுதிச்சி அம்மாச்சி..
என்னதா மைனர் பவுசாத் திரிஞ்சாலும் அவுகளுக்கு சாதி புடிக்காது. எல்லாப் பயலுகளும் பீத்திக்கிற மாதிரி இவுக பேருக்கு பின்னாடி சாதி போட்டுக்குற மாட்டாக. யாராவது சொல்லிக் கூப்புட்டாலுமே...” அடிங்... வக்காலி...” ன்னு அவுக அம்மாவ இவுக கூட சேத்துவச்சித் திட்டுவாக.. நாகூட ஒரு நாளு செல்லமா கூப்புட்டுப் பாத்தேன். ஆத்தாடி.. அவுக வஞ்ச வசவு இருக்கே.... காதுக்குள்ள எருக்கம்பாலு ஊத்துன மாதிரி எரியும்.
இந்தா... இன்னைக்கி போறாகளே.. டீக்கடை காரவுக.. அவுகளை யாருன்னு நெனச்சே..? அவுகதா மூத்தாளோட புள்ள.. அவுக அம்மா எனக்கு குடுத்தே அதே உரிமைய இவுகளும் மரியாதையா மாத்தி இன்னும் குடுக்காக. ஆனாலும் சின்னாத்தான்னு ஒருநா கூப்டது இல்ல. நா என்னைக்காவது காத்து விட்டேன்னா.... என்னைய கொளுத்தும்போது அவுக கையில கொடுத்துப்புடுங்கடா மொதத் திரி... நாங்க வெலகிப் போகலடா.. ஒதுங்கிப் போறேம்...!
முன்னாடியெல்லாம் அவுக கள்ளு குடிச்சாகன்னா ஒத்தமரக் கள்ளு.. பனைமரக் கள்ளுன்னு தனித்தனியா பிரிச்சி சொல்லிப்புடுவாக. இப்பதே.. திருட்டுப்பயலுக எல்லாத்தையும் நிறுத்திப்புட்டு .. போத்தாவுல அடைச்சி விக்கானுவளே.. அந்த சனியன ஒருநா குடிச்சிப்புட்டுதா எஞ்சாமி மீனு திங்கிறேன்னு முள்ளுமாட்டி செத்துப்போச்சி... அதுமட்டும் இல்லையின்னா இன்னும் ஒரு கும்கிக்கு சமானமுடா அவுக.. நீயெல்லா பாக்குற வேல.. கேக்குற கேள்வி.... கூட்டுனவுக பெரும பேசி கூடைய தூக்கிவச்சிக்கிட்டு எந்திரிச்சி போயிருச்சி அம்மாச்சி...
இதாங்க எங்க ஊரு ... இதான் வாழ்க்க...செய்யிறது எதுவா இருந்தாலும் அதுல ஒரு இங்கிதம்.. சோகம் .. சொகம் எல்லாம் இருக்கும். இப்படியே நானும் அப்படியே மாட ஒட்டிக்கிட்டு வந்தேனா..!!.
“ இந்தாரு.. முதுகெலும்பி... என்னடா காத்துல கையாட்டி பேசிக்கிட்டு வாற.. உறுமுன நேரமா வேற இருக்கு.. காத்து கருப்பு எதுவும் பாத்தியோ..?!.. ரெண்டாவது இடுப்பா கூடையச் செத்து வச்சி நின்னா நீர்குழலி...
“ ஆமாமா... காத்தாவும் பாத்தே... கருப்பாவும் பாத்தே... ன்னு அவள மேலயுங் கீழயும் பாத்துக்கிட்டே சொல்லி... “ பக்கத்துல வாரீயாடி...? இன்னும் நல்லா பாக்கணும்.. ன்னு சிலேட பேச .... “ம்ம்க்கும்... இவுக பாத்துட்டாலும்..”.ன்னு வெடுக்கிகிட்டே ஓடிக்கிருந்தா அவ.......
(வெடுக்கும் ..... வெட்கம்)