என் மகள் ஆட்டத்தை ரசித்தேனே
புல்வெளிப் பாதையில் நடந்திடப் புற்கள்
கால்தனைக் கவர்ந்திட ஏங்குதே!
தோட்டத்தின் இனிமையைக் கொஞ்சிடுங் குயில்கள்
நெருங்கிட ரசித்திட கூவுதே!
சாலையின் ஓரத்தில் மரங்களின் தென்றல்
தாவிடத் தழுவிட வீசுதே!
அமுதமும் அளித்திடுங் கடலலை தன்னுடன்
இணைத்திட இழுத்திட பாயுதே!
புற்கள் ஏங்கிட, குயில்கள் கூவிட,
தென்றல் வீசிட, கடலலை பாய்ந்திட,
என் மகள் ஆட்டத்தை ரசித்தேனே!
இக்கவி பாடி மகிழ்ந்தேனே!