பசி
மாநிலத்தில்
பந்த் !
நகரில்
கடையடைப்பு !
பெருநகரத்து
பிரம்மச்சாரியான
நான் ......
உணவகம் தேடி
அலைகிறேன் !
மூடப்பட்டுக் கொண்டிருக்கும்
ஒரு
சிறு உணவகத்தின்
கடைசி தோசையையும்
ஒரு
கடைசி வாடிக்கையாளன்
வாங்கிக் கொண்டிருக்கிறான் !
ஏமாற்றத்தோடு
திரும்புகிறது
கடையின் முன்பு
வாலாட்டிக் கொண்டிருந்த
ஒரு
தெருநாயும் !
எனது
கடைசி நம்பிக்கையைப்
பார்த்துச் சிரிக்கிறது .....
இழுத்து
மூடப்பட்டுவிட்ட
ஒரு
மளிகைக்கடையின்
ஷட்டர் !
தற்போதைக்கு
அறையிலிருப்பது
பாதி
பிஸ்கட் பாக்கெட்டும்
கொஞ்சம் தண்ணீரும்
என்ற
நினைவின் பெருமூச்சுடன்
அறை திரும்புகிறேன் !
பசியில் வாடிய
முகம் கண்டு,
சாப்பிட்டேன் என
நானுரைத்தது
பொய்யென்றுணர்ந்து,
மறுக்க மறுக்க
பிடிவாதமாய்
உள்ளே அழைத்துச்
சோறு போடுகிறது
பக்கத்து வீடு !
சாப்பாட்டில்
உப்புக் கொஞ்சம்
குறைவாகப்
போய்விட்ட
சாம்பாரை,
சரிகட்டிவிடுகிறது
கண்ணீர் !