கும்பிட்டு கேட்கிறேன் - கே-எஸ்-கலை

தட்டுகள் ஏந்தியே தின்று
-தவித்திடும் நிலைமை தீது !
மொட்டுகள் கற்பை மென்று
-முழங்கிடும் நடத்தை சூது !
வெட்டுகள் குத்துகள் என்று
-விளங்கிடும் அரசியல் வாது,
சட்டென மாறுதல் நன்று
-சரித்திரம் மாறுமப் போது !
ஏருக்கு மறுக்காத உதவி
-ஏற்றத்தை இனங்கான தூண்டும்!
பாருக்கு செழிப்பாகும் கல்வி
-பாலகர் பாடத்தில் வேண்டும் !
ஊருக்கு உருவான பதவி
-ஊரார் நலம்பேண வேண்டும் !
வேருக்கு தீதானால் தோல்வி
-விரைந்ததை நீயுணர வேண்டும் !
உடல் விலைகூறும் பெண்டீர்
-ஊருக்கும் வீட்டிற்கும் இழுக்கு !
கடல் பலதாண்டும் கற்றோர்
-கட்டாயம் நாட்டுக்கு இழப்பு !
கடமையை சிரமேற் கொண்டு
-கயமையை தடுத்தல் பொறுப்பு !
மடமையை கருவிற் கொன்று
-மாண்புடன் ஆளுதல் சிறப்பு !
சுத்தமாய் வைத்திரு வாக்கு
-சுபீட்சம் தேடிவரும் உனக்கு !
மொத்தமாய் ஊழலை தாக்கு
-முழுதாய் விடியுமு லகிற்கு !
நித்தமும் நேர்பட நோக்கு
-நேர்மை அழித்திடும் பிணக்கு !
மத்தமாய் வாழ்வதை நீக்கு
-மக்களின் சேவையுன் இலக்கு !
(மத்தமாய் = மத்தம் = போதை)
---------------------------------------------------------------- இப்படிக்கு பொதுமகன் !