+அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே+

சிக்கு புக்கு ரயில்போல
பத்து பேரு பின்னாடி
சத்தம் போட்டு குதூகலமாய்
ஊரைச் சுத்தின ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஞ்சு காசும் பத்துகாசும்
அம்மாவுக்கு தெரியாம
காந்தமா மாற தண்டவாளம்
மேல வச்ச ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கமலா விமலா செஞ்சதபாத்து
ஊரு பூரா சுத்தித்தேடி
மயிலிறக எடுத்து வந்து
புஸ்தகத்தில் வச்ச ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒன்னா வச்ச மயிலிறகு
ரெண்டா மூணா குட்டிபோடும்
என அடிக்கடி திறந்துபார்த்து
வகுப்பில் முட்டிபோட்ட ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எதிரியான நண்பனப் போயி
ஓங்கி ஒரு முட்டுமுட்டி
கொம்பு முளைக்க போகுதுனு
பய முறுத்திய ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பயந்து போன அந்தப்பையன்
இன்னொரு முட்டு முட்டத்தானே
என்னைத் துரத்தி ஓடிவர
ஓடி ஒளிஞ்ச ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காக்கா கத்த உறவுவரும்னு
அம்மாவத் தான் பயமுறுத்தி
அக்கம் பக்கம் கடனவாங்கி
பிரியாணி செய்யச்சொன்ன ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சாயந்தரம் வர காத்திருந்தும்
ஒரு ஈஎறும்பு கூடவாராம
எல்லாத்தையும் போடச் சொல்லி
நான் தனியாத்தின்ன ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெயிலும் மழையும் சேர்ந்துவர
நரிக்கு எங்கோ கல்யாணம்னு
காட்டுப் பக்கம் போயித்தேடி
நாய்துரத்த பயந்த ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கல்லக் கண்டா நாயக்காணோம்
நாயக் கண்டா கல்லக்காணோம்
என்ற டயலாக் நாயிடம்பேசி
கடி வாங்கின ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோலிக் குண்டு கில்லிதண்டா
பம்பரம் போன்ற விளையாட்டெல்லாம்
நாள் முழுதும் விளையாண்டு
வீட்ல திட்டுவாங்கின ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொட்டாங்க் குச்சிய கயித்துலகட்டி
காலுல வச்சி நடக்கத்தானே
ஊரு முழுதும் தேடிப்போயி
அம்மா வெளுத்துக்கட்டின ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பல்லாங் குழியும் கல்லாங்காயிம்
தாயம் மற்றும் திருடன்போலீஸ்
கண்ணாமூச்சி விளையாட் டெல்லாம்
அசராம ஆடிய ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொலை கொலையா முந்திரிக்காயிம்
ஒருகுடம் தண்ணி ஊத்தியும்
பசங்க பொண்ணுங்க எல்லாம்சேர்ந்து
சிரிச்சு விளையாண்ட ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புளியங் கொட்டைய முழுங்கியபின்னே
வயித்தில் மரம்வளரும்னு சொல்ல
அடுத்தபத்து நாள் வரைக்கும்
அதனால் பயந்துகிடந்த ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தீப்பெட்டி அட்டையும் பிலிம்ரோலும்
கொத்து கொத்தாய் சேர்த்துவச்சு
பணக்காரனப் போல மெதப்புல
பந்தா பண்ணிய ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எட்டுவயசுவர பிடிக்காத சினிமா
அப்புறம் ஏனோ பிடிச்சுபோக
அழுதழுதே பல படத்துக்கு
வீட்டார அலைக்கழிச்ச ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
டெண்டு கொட்டாய் மண்ணுமேட்டில்
ராஜா போல உட்கார்ந்துட்டு
முறுக்கும் கடலமிட்டாயிம் சாப்ட்டு
சொகுசா படம்பார்த்த ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொங்கல் விளையாட்டு போட்டிகளில்
மியூசிக்சேர் ஒட்டப்பந்தயம் முடிஞ்சு
பானைஉடைக்க கண்ணுக்கட்டி
நண்பன் மண்டையஉடைச்ச ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போட்டிகள் முடிஞ்சு பரிசுவாங்கி
மூணுபடம் போடும் அறிவிப்பும்முடிய
விடிய விடிய தூங்காமத்தான்
உட்கார்ந்து படங்கள்பார்த்த ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
டி.வி. உள்ள வீட்டுமுன்னே
கூட்டம் கூட்டமா நின்னுக்கிட்டு
வெள்ளிக் கிழமை எட்டுமணிக்கு
ஒளியும்ஒலியும் பார்த்த ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஞாயித்துக் கிழம ஆயிருச்சுன்னா
படம் பார்க்க பரிதவிச்சு
எங்கோ தூரம் தேடிச்சென்று
ஒருவீட்டில் உட்கார்ந்துபார்த்த ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சொந்தக் காரங்க சண்டையக்கண்டு
சத்தியமா பயந்து போயி
பெரியாளாவே வளரக் கூடாதுன்னு
சாமிய வேண்டிக்கிட்ட ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வரப் போற பண்டிகைக்கு
பலகாரம் சுடப் போறதயெண்ணி
தூக்கத்துல எச்சி வழிய
கனவு கண்ட ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அத்த பொண்ணும் மாமன்பொண்ணும்
வரப் போற சேதிகேட்டு
அழகா நான் இருக்கேனானு
அடிக்கடி கண்ணாடிபார்த்த ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வாரா வாரம் அம்மாகூட
சனிக்கிழமை சந்தைக்கு போயி
தினுசு தினுசா பேரம்பேசி
காய்கள் வாங்கிவந்த ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் படிச்ச பள்ளியிலே
பேச்சுப் போட்டியில் கலந்துக்கிட்டு
எழுதி வச்சு நடுங்கிபேசி
கைத்தட்டல் வாங்கிய ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முதல் முறையா வாழ்க்கையில
ஓட்டப் பந்தயத்தில் கலந்துக்கிட்டு
கஷ்டப்பட்டு ஓடி நானும்
கடைசியா வந்த ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தீபா வளி நேரத்துல
சீக்கி ரமா எந்திருச்சி
டாம் டாம வெடிக்கவச்சி
ஊரையே எழுப்பிவிட்ட ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சொல்லச் சொல்ல ஞாபகங்கள்
தேனைப் போல இனிக்குதடா!
அள்ளி அள்ளி குடிச்சிட்டாலும்
தாகம் தீர மறுக்குதடா!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

(குறிப்பு: மீள்பதிவு)

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Oct-14, 1:49 pm)
பார்வை : 720

மேலே