அகவூர்திப் பயணம்
அகமெனும் ஊர்தி
அகந்தை ஏற்றியோடுது.
ஓட்டும் வகையறிய
ஒழுங்காகும் பயணமிது.
தன்னுணர்வையுண்டு
தணியாவாசை முடுக்கிவிட
எண்ணஞ்சொல் செயலென்று
விசைகொண்டு விரைகிறது.
விருப்புவெறுப்புச் சகடங்கள்
விறுவிறுப்பாய்ச் சுழன்றோட
வாழ்வெனும் வீதியிலே
விரைந்தோடும் வண்டியிது.
திசைமாற்றும் சக்கரம்
இசைமதி வசமிருப்பின்
நிதான ஓட்டத்தில்
நிறைவாய்ப் பயணிக்கும்.
வெற்றிதோல்வியென
மேடுபள்ளம் நிறைந்திடினும்
ஆடாது குலுங்காது
அழகாய்க் கடந்திடும்.
இருட்சூழுங் காலத்தில்
விவேக வெளிச்சத்தில்
மருளாது தளராது
தொடரும் பயணமதை.
தெளிவுக்கண் விழிப்பில்
திறம்பட ஓடிடும்.
நெளிவுசுளிவறிந்து
நேர்த்தியாய் நகர்ந்திடும்.
திசைமாற்றும் சக்கரம்
சுயநலங் கைப்போக
விசையோங்கும்
விவேகஒளி தொலையும்.
பாதைவருந் தடங்கல்களை
பாங்காய்க் கடக்காது
பாய்ந்தோடும் சாய்ந்தாடும்
சரிவில் வீழப் பழுதாகும்.
பெரும்பொழுது செலவிட்டும்
பெருஞ்செலவும் செய்திட்டும்
பழுது நீக்குதற்குள்
பெரும்பாடுபட வேண்டும்.
மிஞ்சிய பயணத்தில்
மிகாது இன்பமெதும்.
விஞ்சிடும் வேதனையே
எஞ்சிடும் காலமெலாம்.
ஊர்தி ஓட்டும்விதம்
உங்களுக்குப் புரிந்திருக்கும்.
ஊர்சேருங் காலமட்டும்
உவப்புமிக வாழ்த்துகிறேன்.
வாழ்க எவ்வுயிரும்
வாழ்க நலமுடன்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்.