சுவைபடச் சிந்தி-சுவைபடச் சொல்லு

கீழே வருவது அருள்மொழியரசு திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் கம்பன் கவி நயம் என்னும் நூலிலிருந்து , கொடுக்கப்படுகிறது: சொல்லின் சுவையறியவும் சுவையறிந்து சொல்லவும் பயன் கருதுவார் இதனைப் படித்துத் தெளிவைப் பெற்றுத் திறனை வளர்த்து நல்ல பல பாக்களை/கவிகளைத் தளத்தில் கொடுக்கலாமே என்ற ஆதங்கத்தில் தரப்படுகிறது: இனி கட்டுரைக்குள் போவோம்:

விசுவாமித்திர மகரிஷியின் வார்த்தைகளைக் கேட்ட தசரதன் அளவற்ற துன்பத்தை அடைந்தான் என்று எடுஹ்தியம்பும் பாடல் இது:

'எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தில் எறிவேல் பாய்ந்த
புண்ணில்,ஆம் பெரும்புழையில் கனல்,நுழைந்தால் எனச்செவியில் நுழைத லோடும்,
உண்ணிலா வியதுயரம் பிடித்துந்த ஆருயிர்நின் றூச லாடக்
கண்ணிலான் பெற்றிழந்தான் என,உழந்தான் கடுந்துயரம் கால வேலோன்'

கால வேலோன்- மன்னவன் எப்பொழுதுமே வேலைக் கையில் எடுக்கக்கூடாஹு, பகைவர்கள் வரும் காலத்தில் மட்டுமே எடுக்க வேண்டும் என்பதால் காலவேலோன் என்றார்;

எண்ணிலா அருந்தவத்தோன்--இச்சொற்களுக்குப் பல பொருள்கள் உண்டு:

=எண் இலா அருந்தவத்தோன்= எண்ணிக்கை இல்லாத அருந்தவத்தை உடையவன்;
=எண் நிலா அருந்தவத்தோன்= எண்ணிக்கை நில்லாத அரிய தவத்தை உடையவன்;
=எண்ணில் ஆவருந் தவத்தோன்= இரணியன், இராவணன், பஸ்மாசுரன் முதலியோர் பிறர் அழியும் பொருட்டுத் தவம் செய்தார்கள்; விசுவாமித்திரர் உலக நன்மைக்காகச் செய்தார் என்பதால் எண்ணில் ஆவரும் தவத்தொண் என்றது;

=எண்ணில் ஆ அருந்தவத்தோன்= எண்ணில் நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமான தவங்களைச் செய்பவன்;
=எண்ணில் ஆ வருந்தவத்தோன் =எண்ணில்-நினைத்துப் பார்த்தால் ஆ-காமதேனுவாம் பசுவையே , வருந்தவத்தோன்-வரவழைக்கக்கூடிய தவத்தோன்;
=எள் நிலா அருந்தவத்தோன்= தான் செய்த வேள்வி அரக்கர்களால் எள்ளளவும் நிறைவேறாதபடி தடுக்கப்பட்ட தவங்களை உடையவன்;
=எண் நிலாவு அருந்தவத்தோன்= எட்டுத் திசைகளிலும் விளங்குகின்ற புகழுடைய தவத்திற்குரியவன்;
எண்ணிலா அருந்தவத்தோன்= இராமனை உயிரென்று கருதும் தசரதனின் மனம் அவனைப் பிரிந்தான் என்ன பாடுபடும் என்பதை எண்ணிப்பாராத அருந்தவத்திற்குரியவன்;

இயம்பிய சொல்= இயம் என்றால் மேளம்; இஉஅம்புதல் என்றால் மேளம் போல் ஓங்கிப் பேசுதல்;

இயம்புதல் பற்றிப் பிரிதோர் இடத்தில் வாரியார் அவர்கள்,

"திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில்" என்ற திருக்குறளை மேற்கோலாகக் காடிவிட்டு இவ்வாறு சொல் பற்றித் தெரிவிக்கின்றார்:
சொல்: சிறப்புப் பொருள்
------------------------------------- -------------------------------------------------------------------------------------
அசைத்தல் அசையழுத்தத்துடன் சொல்லுதல்;
அறைதல் அடித்து[வன்மையாக மறுத்து]ச் சொல்லுதல்;
இசைத்தல் ஓச வேறுபாட்டுடன் சொல்லுதல்;
இயம்புதல் மேளம் போல் ஓங்கிச் சொல்லுதல்;

உரைத்தல் அருஞ்சொற்கு அல்லது செய்யுளுக்குப் பொருள் சொல்லுதல்;
உளறுதல் ஒன்றிருக்க ஒன்றைச் சொல்லுதல்;
என்னுதல் என்று சொல்லுதல்
ஓதுதல் காதிற்குள் மெல்லச் சொல்லுதல்
கத்துதல் குரலெழுப்பிச் சொல்லுதல்;
கரைதல் அழைத்துச் சொல்லுதல்;
கழறுதல் கடிந்து சொல்லுதல்;
கிளத்தல் இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லுதல்;
கிளத்துதல் குடும்ப வரலாறு சொல்லுதல்;
குயிலுதல்/ குயிற்றுதல் குயில்போல் இன்குரலில் சொல்லுதல்;
குழறுதல் நாத் தளர்ந்து சொல்லுதல்;
கூறுதல் கூறுபடுத்திச் சொல்லுதல்;
சாற்றுதல் பலரறியச் சொல்லுதல்;
செப்புதல் வினாவிற்கு விடை சொல்லுதல்;
சொல்லுதல் உள்ளத்துக் கருத்தைச் சொல்லுதல்;
நவிலுதல் நாவினால் ஒலித்துச் சொல்லுதல்;
நுதலுதல் ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்;
நுவலுதல் நூலின் நுண்பொருள் சொல்லுதல்;
நொடித்தல் கதை சொல்லுதல்;
பகர்தல் பண்டங்களைப் பகுத்து விலைசொல்லுதல்;
பறைதல் கமுக்கம்{இரகசியம்] வெளிப்படுத்திச் சொல்லுதல்;
பன்னுதல் நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்;
பனுவுதல் செய்யுளில் புகழ்ந்து சொல்லுதல்;
புகலுதல் விரும்பிச் சொல்லுதல்;
புலம்புதல் தனக்குத் தானே சொல்லுதல்;
பேசுதல் சாமான்யமாகச் சொல்லுதல்;
பொழிதல் இடைவிடாது சொல்லுதல்;
மாறுதல் உரையாடலில் மாறிச் சொல்லுதல்;
மிழற்றுதல் மழலைபோல் இனிமையாகச் சொல்லுதல்;
மொழிதல் சொற்களைத் தெளிவாகப் பலுக்கிச் சொல்லுதல்;
வலத்தல் கேட்போர் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்;
விடுதல் மெள்ள வெளிவிட்டுச் சொல்லுதல்;
விதத்தல் சிறப்பாக எடுத்துச் சொல்லுதல்;
விள்ளுதல் வெளிவிட்டுச் சொல்லுதல்;
விளத்துதல் விளக்கி[ விரித்து]ச் சொல்லுதல்;
விளம்புதல் விளக்கமாகச் சொல்லுதல்;
============ முற்றும்=============

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் கி (21-Oct-14, 11:19 am)
பார்வை : 270

மேலே