தவத்தின் பலனாய் தழைக்கும் வாழ்க்கை
உழன்று திரியும் மனதை
உள்ளுக்குள் கட்டுவதே
உண்மையில் தவமென்று
உணர்ந்து உரைக்கின்றேன்.
ஐம்புலன் வழியாக
அலைக்கழியும் அகத்தினையே
அமைதியாய் இருத்தி - தன்னுள்
அடங்கி மூழ்கவைக்க
அருமையாய்க் கைக்கூடும்
அளவிலா ஆனந்தம்.
உயிர்த்தல் நோக்கமிதை
உணர்ந்தே உரைக்கின்றேன்.
முதுகு நேராக்கி
முனைப்போடுடல்
தளர்ந்தமர்ந்து
கண்மூடி
மூச்சின்கண்
மனம் செலுத்த
மூக்கின்கீழ்
மனங்குவிக்க
உள்ளுக்குள் பயணம்
உடன் தொடங்கும் காணீர்.
இலகுவில் குவியாது
எளிதில் அடங்காது
மனம் திமிறும்
மாகடலாய் குமுறும்
எக்குத்தப்பாய்
எண்ணம் தோன்றும்.
ஏகமாய் இரைச்சலிடும்
எழுந்து நகரச்சொல்லும்.
சுற்றியெழும் அரவம்
வெப்புகுளிர் கந்தமென்று
ஐம்புலன்வழி யறிந்து
அவ்வழி அலையும்.
கும்பி கலங்குதென்றும்
குறுகுறுப்பு ஆகுதென்றும்
கால் மரக்குதென்றும்
கைக்குள் குடையுதென்றும்
அடுக்கடுக்காய்
அமளி செய்யும்
அடுத்தபடி
அச்சங்காட்டும்.
விடப்பூச்சி தேளரவு
உடலூர்ந்து போகுதென்றும்
இருளுக்குள்ளிருந்து
மருட்பேய் நோக்குதென்றும்
இட்டுக்கட்டி ஆர்ப்பரிக்கும்
இரையும் - பின் கரையும்.
ஈதெதற்கும் அசையாமல்
தொடரும் முயற்சியெனில்
மெள்ளத் தானடங்கும்
முனகும் - பின்னர்
இழுத்துவிடும் மூச்சினில்
இயையும் தானாய்.
மூச்சில் மனமியைய
மூச்சும் இழையாகும்
இழுத்துவிடல் குறைந்து
இயல்பாய்ச் சுருங்கிவிடும்.
ஐம்புலனோட்டை தானே
அடைந்துபடும்.
எண்ணவலை மறைந்து
அகத்தடாகம் அமைதியுறும்.
இந்நிலை மேற்தொடர
இருப்பு மறந்துபோகும்.
அகம்புறம் மறைந்து
அனைத்தும் ஒன்றாகும்.
உணர்வில்லா நிலையது
உள்ளுக்குள் பூரிக்கும்.
அமைதியில் பூரணமாய்
ஆழ்ந்திடும் அகமுழுதும்.
மவுனத்தில் ஆழ்ந்துறைந்து
மனங்கரையும் - பின் மறையும்.
எல்லாம் ஒன்றாகி
ஒன்றும் இலாதநிலை
தோன்றுங்காலை - இது
தூய்மைத் தவமாகும்.
முனைப்புடன் முயற்சிகூட்டி
மும்முரமாய் இறங்கிவிடில்
எவர்க்கும் கைகூடும்
உயரிய இத்தவமே.
மனமடக்கத் தெரிந்துவிடில்
மாறிவிடும் வாழ்வுநிலை.
மலமழிந்து மனமெங்கும்
மலர்ச்சி தோன்றும் நிச்சயமாய்.
நோக்கு மாறும் - வாழ்வின்
நோக்கம் மாறும்.
பொருட்தாக்கம் அருகி
பெரும்போக்கு கூடும்.
எதன்பின்னும் அலையாது
எதற்கும் அசையாது
இன்பதுன்ப மெல்லாம்
இயல்பாய்க் கடந்திடலாம்.
எதுவரினும் எளிதாக
ஏற்றிடலாம் - பின்
எஞ்சிய காலமெலாம்
இனிதே கழித்திடலாம்.
வாழ்க எவ்வுயிரும்
வாழ்க நலமுடன்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடனே.