கனவு தேசம்-வித்யா

கனவு தேசம்-வித்யா

காற்றில் கலந்துவிட்ட
ராகத்திற்குத்
தலையாட்டும்
நதிக்கரை நாணலாய்
இன்றைக்கெல்லாம்
என் மனம்.....!!

வியாச கம்பர்களின்
காப்பியங்களோ...
வள்ளுவனின் பொதுமறையோ
எதுவும்
பேசியிருக்கவில்லை
என்னோடும் பேசவில்லை..!!

சாரல் தெளித்திருந்த
மேகம் போல்
நிலையில்லாக் கனவுகளோடு
சிலநொடிகள் வாழும்
நித்திரையின் சுகங்கள்.....

என் செவிசாய்த்துக்
காத்திருக்கிறேன்....
அது.... இசையா..?
விழிமூடித் திறக்கையில்
கசிந்திருந்த நிகழ்வில்
பயணித்திருக்கிறேன்..
அது... ஒளியா..?

நாவினைப்
பட்டினிபோட்டுக்
காத்திருக்கிறேன்.........
அது... சுவையா..?

நேற்றைய கனவில் வந்தது
யாதென
அறிய......!!


என்
உணர்வுகளின்
வழித்தடத்தில் வந்துவிழுந்து
கால்பிடித்துக்
கெஞ்சியது.....
நேற்றைய இரவினில்...!!

இரவு இரவாகக் கழிந்ததென்ற
வழக்கம் மாறி
ஒரு சிறகு
முளைத்திருந்தது ......!
தேவதையாகிப் போயிருந்த
என்னில்...!

கனவுகளின் இரகசிய அறையில்
ஓர் புத்தகம்.....
அதன் எல்லாப் பக்கங்களிலும்
என் நாட்கள்......அதன் சுவடுகள்
குருதிப் படிமங்களாக...

வழியெங்கிலும்
மயானக் காற்று அமைதி
விதைத்து வந்தது .......

உதிர்ந்த சிறகுகள்......
கண்ணீரோடைகள்.......
செல்லரித்த இதய அறைகள்...
சாவின் ரணங்கள்...... எல்லாம்
அடுக்கிய பெரிய
புத்தக அலமாரி மிதந்திருந்தது...

மூலைகள் மின்னியிருந்த
ஒரு
புத்தகத்தின் நடுப்பகுதியில்
இறந்த ரோஜாவின்
ஒற்றை இதழொன்று...ம்...

மிரட்சியின் விளிம்பில்
எனை நான்
அறிந்திருந்த போது
என் சிறகுகள் முறிந்திருந்தன.....!!

பறக்க முயன்றும்
விரும்பாமல்
மூர்ச்சையாகிக் கிடந்த
என்னை
எதுவோ தன் சிறகில் ஏற்றி
என் கனவின்
ரகசிய அறையில்
இறக்கிவிட்டுச் சென்றது......!

ஆம்....! நான்
தவறுதலாக
என்னவனின்
கனவு தேசத்திற்குள்
பிரவேசித்திருக்கக் கூடும்..........!!

எழுதியவர் : வித்யா (23-Oct-14, 2:34 pm)
பார்வை : 223

மேலே