மன்னவன் வருகை
கரைந்திருந்த கைகள்
வற்றியிருந்த கண்கள்
ஒட்டியிருந்த கன்னம்
நொடிகளை யுகங்களாய்
கழித்து கொண்டிருந்த வேளை
நிலவு முகம் தேய்பிறை
ஆகி
நினைவு தனில் அவனோ
பெளர்ணமியாகி
தென்றலில் அவன் மூச்சுக்காற்றை
தேடியபடி
வருகை நோக்கி காத்திருந்தாள்
ஆம் அந்நாள் வந்தது
நாடு வென்றதென செய்தியும் வந்தது
மன்னவன் வருகை எண்ணி
மலர்ந்தாள்
வெற்றி மாலை கட்டி
விதவித உணவுகளை சமைத்து
கனவுகளோடு மன்னவனின்
இன்முக நினைவுகளோடு
காத்திருந்தாள்
ஊரே திரண்டது
வெற்றி முழக்கம் கேட்டது
வீரர் படை அணிவகுப்பில்
தன் வீரன் முகம் தேடி
சுழன்றுக்கொண்டிருந்த அவள்
கண்களுக்கு அதுவரை
புரியவில்லை
நாடு வென்றது அதற்காக
இவள் மன்னவனை
சுடுகாடு தின்றதென