நான் கேட்கும் நல்வரம்
உயிரை உடலைப் பரிசாய்த் தருவாய்
*****உனையே அழகாய்த் -துதிபாட
உயிராம் தமிழை வசமாய்க் கொடுப்பாய்
*****ஒருவா இறைவா -ரகுமானே
பயிர்கள் செழிக்க மழையை நிலத்தில்
*****வரமாய் இறக்கும் -பெரியோனே
பகைமை ஒழிய உறவில் பசுமை
*****பெருக்கி எமக்குத் -தருவாயே
இனிதாய் உளத்தே முழுதாய் நிறைந்து
*****இருக்கும் தலைவா -முதல்வோனே
இசையை கவியை இசைவாய் எனக்கு
*****இதயத் திருத்தி -மகிழ்வாயே
முனிவால் ஒதுக்கி முகத்தைத் திருப்பின்
*****முடிவை சிறியன் -பெறுவேனே
முழங்கும் முரசாய் மொழியின் அரணாய்
*****முடிசூ டருளும் -அருள்வாயே