மரணம் அழை - ரகு
உளமதன் கண்ணில்
......உலகம் பார்
களமது கற்கக்
......கற்றுக் கொள்
நலமது தோல்வி
......நேரெதிர் நில்
வளமெது வாழ்வில்
......விரைவே கொள்
முதலெது முடிவெது
......முன்னம் ஆய்
வதமது நெஞ்சில்
......வருதல் கொல்
சிதறுதா எண்ணம்
......சற்றே நில்
பதரிடல் இன்றிப்
......பகுத்து அறி
உன்னில் அறிவில்
......ஒற்றடை அடி
எண்ணில் எழுத்தில்
......ஏறுதல் அறி
கண்ணில் நிலையாய்க்
......கனவது கொள்
மண்ணில் மறையாப்
......பேரது பேண்
ஈரடி எனநீ
......எங்கிலும் செல்
தேரதன் மதிப்பைத்
......திக்கிலும் காண்
ஊரது உன்பேர்
......ஓதிடச் செய்
உறவது போற்றும்
......ஒழுக்கம் பெறு
ஏனது என்றுடன்
......எளிதில் புரி
தேனெது விசமெது
......தெளிந்து தெரி
வானது மனசு
......வாழ்ந்து தெளி
மானம் போனால்
......மரணம் அழை!