என்ன தவம் செய்தேனோ

***என் கவிதைக்கு முதல் மேடை கொடுத்தவருக்கு ...***

அப்பப்போ வருவேன்
அதுஇதுவும் சொல்வேன்
தப்பாது நீசொல்வாய்
தவறாமல் படிங்கள் துவான் ! ...

எப்போதும் சுறுசுறுப்பு,
ஏராளம் உன்பொறுப்பு !
இருந்தாலும் என்னையுன்
எண்ணத்தில் வைத்திருப்பாய் ...

அப்பா வயதுனக்கு!
ஆனாலும் நாம்நண்பர்
எப்போது மலர்ந்ததுவோ ?
என்றென்றும் இதுதொடரும்..

பணத்திற்காய் பலர்வருவார்
பாசம்மட்டும் நானறிவேன்
இனத்திற்காய் நீசெய்யும்
எண்ணற்ற தொண்டறிவேன்..

சுயநலம், திமிரு
இரண்டும் இருக்கிறதாம்!
சொல்பவர் சொல்லட்டும்
உன்மறுபக்கம் நானறிவேன்!

சோகத்தை மறைத்துவைக்கும்
சுகவித்தை எங்குகற்றாய் ?..
வேகத்தில் சிரிக்குமந்த
விந்தையதை எங்குகற்றாய்?

நேராக சொல்லாமல்
நேக்காக காக்கா
பிடிப்போரை தூரத்தில் வை !
படிப்போரை பக்கத்தில் வை !

உன்னறிவுக்கு என்வணக்கம்
ஒருபோதும் குறையாது..
உனக்கென்று ஒன்றானால்
நான்தாங்க முடியாது !

பெரியாள்நீர் பெரியாள்தான் !
எனக்குமொரு மேடைதந்தாய்!
கொடுத்தகடன் கேட்காமல்
அடுத்தகடன் கொடுத்துவிட்டாய் ..

எனக்கான எதிர்காலம்
எங்கென்று தெரியாது !
உனக்கான என்கடனும்
எப்போதும் முடியாது !...

நீரசித்த என்கவிதை
நிற்கும்பலர் நெஞ்சத்தில் ..
பூரசிக்கும் உன்மேன்மை
புரியாதே எல்லோர்க்கும்...

முதன்முதலாய் என்கவிதை
முழங்கியது ஏபிசி யில்
அதனடுத்த எழுத்தாக
டீன்நீயென் சிராஜானாய் ...

அரிவாளைக் கரமேந்தும்
அறிவாளி ஒருவனைத்தான்
பிடிவாளாய் நீகொண்டாய்!
பின்வருமோ துன்பமெதும்?..

பல்லாண்டு நீவாழ்ந்து
பரம்பரையும் தளைத்திருந்து
சொல்லாண்ட புலவரெல்லாம்
போற்றும்படி செழித்திடுவாய் !

---------------------------------------------------------------------------
துவான் = ஐயா என்ற வார்த்தையின் மலாய்மொழி சொல்
ஏபிசி =கோலலும்பூரில் அமைந்திருக்கும் உணவகம் ,மேல்மாடி சிறிய அரங்கம் கொண்டது

எழுதியவர் : அபி (29-Oct-14, 11:42 pm)
பார்வை : 129

மேலே