கதிராய் எழுந்தாய் கதிரேசா
கதிராய் எழுந்தாய் கதிரேசா !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆனைமுக நாயகனே அருமருந்தே அற்புதமே
மோனைத்த மிழ்காக்கும் மூவாமுதல் நிலையே
சேனைமண வாளனைச் சேய்மொழியில் நான்பாட
தானைத் தளபதியே தாள்பணிந்தேன் கணபதியே !
விண்ணாடும் நிலவொளியே வேல்பிடிக்கும் செஞ்சுடரே
என்நாடும் காத்தருளும் எழிற்பழனி வேலவனே
கண்ணான முருகனுனை கவிபாடி நானழைக்க
என்னாசைக் கண்மணியே எழுந்தாய் இதுசமயம்
தில்லைநடம் புரியும்சி தம்பரனார் புத்திரனே
கிள்ளைமொழி செப்புவள்ளி கைப்பிடித்த சுந்தரனே
முள்ளையெடுத் தாலுமதை முல்லையென மாற்றிவைத்து
பிள்ளைக்கு அருளியநீ எழுந்தாய் இதுசமயம்
கண்ணுதலான் நல்மணியே கன்னல்மொழி நாயகமே
மண்ணிலத்தார் மன்றாடும் மாழைமயில் வாகனனே
விண்ணப்பித்தேன் என்குறைகள் வேகமாக மாற்றிவிட்டு
அண்ணலாறு முகம்பூக்க எழுந்தாய் இதுசமயம்
பொல்லாத்தி சைகளைந்து பொய்கையென வார்த்தருளும்
புல்லார்ப கையழிக்கும் புள்ளிமயில் வேலவனே
செல்லாத காசெனவே சேய்நிலையும் மாறும்முன்னே
வில்லார்வ டிவழகா எழுந்தாய் இதுசமயம்
வானோர்கு லம்காக்க வண்ணமயி லேறிவந்தாய்
தானவர்தி ரளழிக்க தற்பரமாய் நீயிருந்தாய்
மானாமென் மிடிதீர்க்க மன்னவனே நீயிசைந்தாய்
தேனாந்தமிழ் தொடுத்தேன் எழுந்தாய் இதுசமயம்
தாலாட்டும் நேரமிதில் தாயெனவே நீயும்வந்தாய்
பாலூட்டும் வேளைதனில் பக்கமாக நீயிருந்தாய்
வேலாட்டம் விழியிரண்டால் வேண்டுவரம் நீயருள
கோலாட்டம் ஆடியிங்கு எழுந்தாய் இதுசமயம்
அள்ளிக்கொ டுத்ததெல்லாம் ஆர்வலனே பெருகியதே
புள்ளியெனப் பாங்குயர்த்திப் பிள்ளைநிலை காப்பவனே
கள்ளிமலர்ப் பூத்ததுபோல் கார்முகில்தான் பெய்ததுபோல்
வெள்ளிமயில் ஏறியிங்கு எழுந்தாய் இதுசமயம்
ஆலைக்க ரும்பாக ஆகிநின்ற என்னிலையை
சோலைக்க ரும்பாக்கி சுந்தரமாய்த் தந்தவனே
நாளையெனத் தேதிசொல்லி நாட்களைக்க டத்தாமல்
வேளைபி றந்ததென்று எழுந்தாய் இதுசமயம்
ஒப்பேதும் இல்லையென்று உன்னடியை நம்பிவந்து
எப்போத ழைத்தாலும் இன்முகமாய்த் தோன்றுகிறாய்
அப்பாற்க டலுக்குள்ளே ஆனிமுத்தே அங்கிருந்தும்
தப்பாம லேஇணங்கி எழுந்தாய் இதுசமயம்
வாடாம லர்க்கரத்து வஞ்சியரின் நாயகனே
பாடாத செந்தமிழே பார்த்தருளும் தாயகமே
தேடிவரும் பாலகரைத் தேம்பிடவி டாமலேநீ
நாடிக்கு றைதீர்க்க எழுந்தாய் இதுசமயம்
கல்லிற்சி லைவடித்துக் கந்தாவு னைத்தொழுது
சொல்லாத என்னிலையைச் சொல்லிவிட்டே னிப்போதும்
எல்லாவ ரம்மருளி ஏற்றந்தரும் வேல்முகமே
நல்லார்ம னங்குளிர எழுந்தாய் இதுசமயம் !
... மீ.மணிகண்டன்