உதிரம் தந்த உறவு

உனக்கு பிடித்ததை மட்டுமின்றி
எனக்கு பிடித்ததும் வேண்டி நின்றாய்
கிறுக்கு பிடிக்கவைத்து நம் தகப்பனிடம்
கிடைத்ததெல்லாம் பெற்றுக் கொண்டாய்

இரண்டு இரண்டாய் வாங்கி வந்து
இரண்டையும் நீயே வைத்துக்கொண்டு
புதியதாய் வாங்கி தருவேனென்று
புதுமையாய் என்னிடம் சொன்னவனே

தனித்து கிடந்த என் வாழ்வில்
தவமாய் வந்த என் தம்பி
தடையாய் இங்கு எதுவுண்டு
தயங்காமல் நீ வந்துவிடு

ஒரே வீட்டில் உணவுண்டு
ஒன்றாக நாம் துயில்கொண்டு
ஓடியாடிய பொழுதெல்லாம்
ஓய்ந்தாலும் நெஞ்சில் ஓயாதே

விடியும் வரை நாம் விளையாடி
விடிந்தபின் ஒன்றாய் கண்மூடி
வியந்து வாழ்ந்த வாழ்வெல்லாம்
விழியில் வந்த கனவாடா

பள்ளி நாமும் செல்கையிலே
பல பொய்கள் சொல்லி மெய்யாக்க
பாசம் காட்டி உன்பக்கம்
பக்குவமாய் எனை இழுத்தவனே

எனைப் படங்கள் வரைய சொல்லி
எதிரே வந்து நீ நின்று
என் நிழலைக்கூட நிஜமாக்க
என் கரத்தில் வண்ணம் தந்தவனே

கொஞ்சம் கொஞ்சமாய் காசுசேர்த்து
கொஞ்சும் மழலையில் நீ கூட
நெஞ்சம் ஏங்க பரிசளிப்பாய்
நெகிழ்வுகள் இன்று பொய்யாடா

உன்னைவிட்டு நான் தனியாய்
உலவும் வாழ்வு இனி வேண்டாம்
உயிரில் பாதி நீ தானே
உதிரம் தந்த உறவன்றோ

என் கண்ணைவிட்டு காட்சியிங்கு
என்றும் விலகி செல்லலாமா
என் கணவன் இனி உன் தோழன்
என் கண்ணில் ஒன்று நீயன்றோ

எதிர்த்து எவர் வரும்போதும்
என் கைகள் கோர்த்து துயர்தீர்க்க
எனக்கு கிடைத்த முதல் தோழா
என் வாழ்வில் பாதி நீயன்றோ

உறவு சொல்ல நிறைய பேருண்டு
உன்போல் என்தம்பி யாருண்டு
காசு பணம் கை முளைத்தா
கதவை சாத்தும் நம்முன்னே

உனக்கு தாயும் நான் தானே
எனக்கு பின்தான் நம்தாயே
கணக்கு சொல்லி ஏனடாஎன்
கழுத்தைப் பிடித்து நெறிக்கின்றாய்

காசு மட்டும் வாழ்வென்றால்
கட்டாயம் நீ சென்றுவிடு
கண்ணீர் விட்டு நான் சிரித்த
கண்ணா உன் மழலை பொய்யாடா

இனியொரு பிறவி எடுத்தாலும்
இவ்வீட்டில் வந்தா நீ பிறப்பாய்
உண்மை நீயும் உணராமல்
பொய்மை கூறி ஏன் திரிகின்றாய்

மறைந்த சூரியன் எழுந்துவிடும்
மனதில் மாற்றம் வந்துவிடும்
பிரிந்து நீயும் செல்லாதே
பிறவியெல்லாம் எனைக் கொல்லாதே
------------------------------------------------------------- மறு பதிவு --- குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (3-Nov-14, 10:04 am)
பார்வை : 354

மேலே