ஆவியாக அலைகின்றேன்

எழுத என்ன காரணம்
எழுத்தாளிப் பெண்ணே?
நழுவும் பொழுதை நகர்த்தவா?
நண்பர் வட்டம் பிடிக்கவா?
பழுதை நீக்க பகற்கனவா?
பணமா, புகழா, பழகிடுச்சா?
எழுத என்ன காரணம்
எழுத்தாளிப் பெண்ணே?
"வயிற்று சிசுவின் உதையைப் போல்
வாட்டி எடுக்குது சில நினைவு....
பயிற்றிப் பிடித்து வெளியிட்டால்
பாரம் அகன்றாற் போலுணர்வு!
நாளை இறக்கும் நாள் வரினும்
நல்ல நினைவுகள் இறவாது
வாழையடி போல் வாழ்வதற்கு
வாகாய் எழுத்தில் வடித்திட்டேன்.
ஆவி துறக்க வில்லை நான்;
ஆயினும் எழுத்தென்றோர் வடிவில்
ஆவியாக அலைகின்றேன்.
அன்பர் விழி வழி நுழைகின்றேன்!’’
அருணை ஜெயசீலி