கரையா காகம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆகாயம் பார்க்கையிலெல்லாம்
ஏதேவொரு காகம்
எதையோத் தேடி
எங்கோ கரைந்து
சிறகடித்த படியே யிருக்கிறது!
உணவைக் கண்டவுடன்
துணைகளை கரைந்தழைக்காமல்
ஒற்றையாய் உணவுண்ணும்
காகத்தை
கண்டதில்லையிதுவரை !
சேவல்கள் கூவி
விடியாத பொழுதுகள்
சிலநேரம்
காகங்கள் கரைந்து
விடிகின்றன !
மனிதனைப்போலன்றி
இனத்திற்கொரு ஆபத்தென்றால்
எண்ணற்ற காகங்கள்
நொடிப்பொழுதில்
கூடிக் கரையும்
ஒற்றுமை யாச்சரியத்தில்
ஆறறிவினை ஐந்தறிவு
கொத்தித் தின்கத்தான்
செய்கிறது !
கூடுகட்டக் குச்சிச்
சேகரித்துத்
தத்தித் தத்தி
தளிர் நடை போடும்
பொன் கருமண்டங்
காக்கை
தலை சாய்த்து
அக்கம் பக்கம் பார்த்து
விருட்டெனப் பறக்கையில்
மயிலின் நடனம் மிஞ்சும்
பேரழகுக் காண
கண் கோடி வேண்டும் !
ஆகாய வெளியெங்கும்
பறந்து
அசுத்தங்களை
அப்புறப் படுத்துமதைத்
தான் -
பித்ருவாயென்னி உணவளித்து
பாவம் தீர்க்கிறோம் !
அகோரக் குரலிருந்தும்
குயில் முட்டையடை
காத்து -
சங்கீதத்தைப் பறக்கவிடும்
பெருந்தவத்தில்
காகத்தினழகு
பட்சிகளினுச்சியாகி
தாயுள்ளத்தில்
கரைந்து தான் போகிறது
காகத்தின் கரைதல்