மௌனமாய் இருக்கிறது வானம்

மௌனமாய் இருக்கிறது வானம்

வறண்டு கிடக்கும்
பூமியை பார்த்தும்
மிகவும் மௌனமாய்
இருக்கிறது அந்த வானம்

ஒதுங்கிப் போகிறது வெண்மேகம்

மேகத்தின் நிழலும் விழாது
தவித்துக் கிடக்கின்றது செம்மண்

இருள் மறைத்தாலும்
வெப்பம் பூமியின் வெக்கையை
வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றது

மௌனம் காற்றை
அடிக்கடி சூறையாடுகின்றது

வேர்கள்
நீர்த்தேடுதல் அர்த்தமற்றதென்று
நிறுத்திக்கொண்டது;
உதிர்ந்துகொண்டிருக்கும்
இலைகள் அதனை
சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கின்றது

சருகுகளின் சங்கீத நாடி
வெப்பத்தினால் ஒடிக்கப்பட்டு
துகள்களாக நொறுக்கப்படுகின்றது

ஓலமிடவும் சக்தியின்றி
நரிகள் பொந்துகளில் சாகின்றன

பச்சிகளில் இசையின்றி
பரந்தவெளி மயானமாகின்றது

வெடித்த ஏர்க்கலப்பை
உயிர் தக்கவைக்கப்பட்டிருக்கும்
உழு மாடுகள்
தெறித்து பொறியாகப்போகும் நிலையினில்
தானிய விதைகள்
முதலை விழுங்கும் வட்டி

நதியின் வாசம் அறியாத
பொட்டல் காட்டில்
வானம் பார்த்தே
வறண்டு போகின்றது
உழவன் முகம்

அங்கே...

கரியதொரு மேகமும்
இன்பவெள்ளம் எழுப்பிப் போகும்
சிறியதொரு சாரலும்
புழுதிகளை தெறிக்கச் செய்யும்

சூரிய ஒளி மங்குமென்றால்
சொக்கிப்போகும் உயிர்களெல்லாம்
சூறைக்காற்று அடிக்குமென்றால்
வாரப்படும் மனங்கள் எல்லாம்

இடிமுழக்கம் கேட்குமென்றால்
இதயத்துடிப்பும் சேர்ந்தாடும்
கொடிமின்னல் மிளிருமென்றால்
பெரும் புன்னகைகள் ஒளிருமங்கே

பெய்யெனப்
பெருமழை ஒன்று பெய்துவிட்டால!!??

எழுதியவர் : வெ கண்ணன் (7-Nov-14, 8:50 am)
பார்வை : 482

மேலே