கடல் அலை
கடலில் அலை ஒரு குழந்தையாக
துள்ளிக் குதித்து பொங்கி எழுந்து
விளையாட இடம் தேடி கரையை நோக்கி
புரண்டு புரண்டு ஆனந்தம் மேலிட ஓடி விளையாடுகிறது
கடலோ தன் பிள்ளை அலைக்கழிக்கப் படுகிறதோ
என ஏங்கித் தவிக்கிறது
கடல் படும் வேதனை துள்ளித் திரியும்
அலைக்குத் தெரியுமா
கடலில் வாழும் உயிரினங்களும்
இந்த அலைகளின் துடுக்குத் தனத்தால்
மிரண்டுபோய் செய்வது அறியாது திகைக்கின்றன
அலையே உன் விளையாட்டுக்கு ஓய்வில்லையா
இது உனக்கு விபரீதமாகத் தெரிகிறதா இல்லையா
நீ பொங்கி எழும் ஆக்ரோஷம் உனக்கு விளையாட்டு
இதனால் எத்தனை உயிர்களை அழித்துவிட்டாய்
உன் அளவற்ற மகிழ்ச்சி இதுதானா
உன் தாயாகிய கடல் அம்மா
ஆழத்தில் அமைதியுடன் பார்த்திருக்கின்றாள்
ஏனோ உன்னை அடக்க அவளால் முடியவில்லை
உலக மக்கள் கேட்கின்றோம் அமைதியுடன் விளையாடு
உன்னுடன் விளையாட உன் அழகைப் பார்க்க
ஆசைப்படும் மக்களைப் பார்
காற்றுடன் இசை பாடி விளையாடும்
அழகுக் கலையாக காட்சியாக வா
மெதுவாக உருண்டு உருண்டு வா
அதுதான் உனக்கு பெருமிதம்
மக்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி
உன்னை ரசித்திடும் கன்னியென காணவே வா