மெளனமாய் ஒரு பூகம்பம்- 1 - சந்தோஷ்

ரசனைக்கும் ஆசைக்கும் நூல் அளவே வித்தியாசம்.

ரசனை..! ஆராதனை செய்யும்
ஆசை..! பொறாமை செய்யும்
ரசனை... !பார்க்க துடிக்கும்
ஆசை.. ! பறிக்க துடிக்கும்

இவன் ஒரு ரசனைக்காரன். மின்னலின் கீறலை , மேகத்தின் மோதலை செவிக்கொடுத்து ரசிப்பான்.
மழை வரும்போதெல்லாம் மழையை கண்ணிமைக்காமல் ரசிப்பான். மழை விட்டபிறகு மண்வாசத்தை நுகர்ந்து ரசிப்பான்.

மொட்டை மாடியில் வட்ட நிலா. வட்ட நிலாவிற்குள் வடை சுட்ட பாட்டி, எண்ண எண்ண முளைக்கும் நட்சத்திரங்களின் மின்னும் மிடுக்கை வானத்தை நோக்கி பரவசமாய் ரசிப்பான்.

மழலையை , அதன் வாயில் ஒழகும் எச்சில அழகை ரசிப்பான். கன்னிப்பெண்ணின் விழியழகை கவிதையாய் ரசிப்பான். கர்ப்பிணி பெண் சுகமாய் சுமப்பதை கருணையாய் ரசிப்பான். கிழவியின் பொக்கை வாய் சிரிப்பை புன்னகைத்து ரசிப்பான்.

கோயில் மணியோசையுடன் பிச்சைக்காரன் தட்டில் விழும் சில்லரைக்காசின் ஒலியில் எழும் இசையை பகுத்தறிவு மெட்டுப்போட்டு ரசிப்பான். கிராமச்சாலையில் விரிந்திருக்கும் வைக்கோல் வாசத்தை ரசனையில் நாசியில் இழுத்தே ருசிப்பான் இவன்

தடபுட என்று ஓடும் ரயிலின் வேகச்சத்தம். பட்பட் என்று கடுகு பொறிக்கும் சமையல்சத்தம், நடுநிசியில் டிக் டிக் எனும் கடிகாரத்தின் துடிப்புச்சத்தம் என சின்ன பெரிய ஓசைக்கூட இவனுக்கு ரசனையான இசைதான்.

அன்னையின் மடியில் உறங்கும் சுகம்.
தங்கையின் கூந்தலை இழுத்து விளையாடும் சில்மிஷம்,
தம்பி தன் முதுகில் செல்லமாய் அடித்து ஓடிஒளியும் தந்திரம் .
தந்தையின் பாக்கெட்டில் சில்லரைக்காசு திருடும் திகில்.

தோட்டத்து பூக்கள் இலையுடன் தென்றலில் அசையும் நாட்டியம்
கடல் அலைகள் பாதங்களில் முத்தமிட்டு எழுப்பும் சங்கீதம்
குருவி, காகங்களின் சிறகுகள் படபட ஒலியில் பறக்கும் நளினம்

இன்னும் என்ன என்ன இருக்கிறதோ.. எதுவே யாவுமே இவனுக்கு ரசனைதான். ரசிப்புதான். ரசித்தே ரசித்தே பசியை மறந்திடும் ரசிகன் இவன்.


இப்படிப்பட்ட ரசிகன் மொழியை ரசிக்காமல் இருப்பானா.? அதுவும் உச்சரித்தாலே தித்திக்கும் தேன்சுவை தமிழ்மொழியை ரசிக்காமல் எந்த தமிழனும் இருந்திட முடியாது.
தமிழ்மொழியை ரசிப்பவன் கவிதையை ரசிக்காமல் இருப்பானா....??

கவிதை…! ஆஹா சொல்லும் போது பூரிக்கிறதே இதயம்..! காதலியின் மடியில் மலர்ந்து அவள் விழியின் ஈர்ப்பில் மயங்கும் சுகம் கிடைத்திடுமே…! இல்லையேல் ..நதியின் ஓரத்தில் புல்வெளிதளத்தில் சுகமான ராகம் கேட்டுக்கொண்டே உறங்கிடும்போது தென்றல் நம் மேனியை சில்லென்று தொட்டுச்செல்லும் சுகம் கிடைத்திடுமே…!
கவிதை ஆக்ரோஷத்தில் எழுதினாலும் , ஆவேசத்தில் படித்தாலும் படித்திடும்போது இனித்திடாமல் இருக்குமா என்ன? இனிக்காமல் இருந்திட்டால் அது கவிதையா என்ன ?
கவிதை என்றாலே மனம் மயங்க வேண்டும். இதுதானே கவிதையின் லட்சணம். இந்த லட்சணம் எந்த இலக்கணத்தில் இருந்தால் என்ன ? இலக்கணம் மீறி இருந்தால் என்ன? வாசகனுக்கு தேவை இலக்கிய மயக்கம் தானே..!

சுண்டல் பொட்டலத்திலுள்ள கவிதைகள் முதல் புத்தகத்தில் அச்சில் ஏறிய கவிதைவரை தேடித்தேடி படிப்பான்.

இன்று ஒரு கவிதையை வாசிக்க, அந்த நூலகத்திற்கு நுழைகிறான் ”வாசுதேவன்” ஒரு வாசகனாக..!

வழக்கமாக வாசுதேவன் அமரும் இருக்கைக்கு எதிரே வழக்கத்திற்குமாறாக ஒரு புதுவாசனை…

அது மல்லிகைப்பூவின் வாசமா ? இல்லை மங்கையின் வாசமா? எதுவும் வசப்படவில்லை வாசுதேவனுக்கு..! மூக்கு வரை புத்தகம். புத்தகத்திற்கு சற்று உயரே வெள்ளை கருப்பு பூவோ யோசிக்கவைக்கும் அந்த விழியழகியின் கண்ணிமை , கண்மையில் கிறங்கியது இவனின் கிறுக்கு மனம்.

யாரவள் ? யாரவள்?

( அந்த அழகிய விழிக்காரி இவனை ரசிப்பாளா ? )


[ தொட~ட~ரு~ம்]

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (8-Nov-14, 10:22 pm)
பார்வை : 326

மேலே