மணி 9

(யாழ்ப்பாண மண் வாசம் 2)
தாய்நாட்டு பூங்காற்றும்
தாலட்டு பாடும்
விலை பேச முடியாத
காற்று காதோடு கதை
பேசிபோகும்

காலையில் இந்த
சாலையில் காற்றை
கிழித்தபடி போகும்
பறவைகள் வணக்கம் சொல்லி
தலையசைக்க
உந்த உருளும் வண்டியல்
கீரை பெட்டிகளுடன்
மருதனார்மட சந்தையை
அடைந்த போது

நித்திய திரு விழாவாய்
ஆயிரம் திருமணம் ஒன்றாய்
அரங்கேறும் நிகழ்வாய்
மௌனம் என்பது அறியாத
கூட்டத்தில்
மௌனமாய் உள்நுழைந்து
கீரை தரகருடன் தகராறு
செய்து விவசாயி என்ற
திமிருடன் விலை பேசி
வித்த பின்பே
களைப்பு மறைந்தது

வரும் வழியில் மாட்டுக்கு
தீவனமும்
இறைப்புக்கு மண்ணெண்ணையும்
பூச்சிக்கு மருந்தும்வாங்கியதும்
எமக்கென மிஞ்சியது
கைகளில் ரேகைகள் மட்டும்

வீட்டுக்கு வந்து
அவித்த குழல் பிட்டில்
நேற்றைய மீன்குழம்பு
உற்றி பசிமறந்த பின்புதான்
பள்ளிக்கூட ஞாபகம்

8 மணி பள்ளிக்கு
சீரான உடை அணிந்து
சீரற்ற வீதிகளில் ஓடினோம்
மணி 9. .



( எம் தமிழர் வாழ்வில் ஓட்டம்
முடியவில்லை பல நாடுகள்
தாண்டியும் )

எழுதியவர் : இணுவை லெனின் (10-Nov-14, 5:21 pm)
பார்வை : 52

மேலே