கல்வி முறையில் மாற்றம்

ஆயுத பூஜை !

9 மணிக்கு
ஒலிக்கும் பள்ளி மணிகள்
நம் குழந்தைகளின்
அறிவில்
அபாய சத்தமாகவே
அறியப்படுகிறது !

முதல் மதிப்பெண்
பெருவோர் கூட
வெறும் புத்தகப் பிராணியாய்
இருக்கின்றாரே..
கல்விச்சாலைகள்
அறிவாலயமா?
இல்லை சரணாலயமா??

'குழந்தைகள் அனைவரும் தெய்வம்'
சிலை வைக்க வேண்டிய தெய்வங்களை
அடிமைச்சிறையில்
அல்லவா வைக்கிறது
நம் வகுப்பறைகள் !

'எழுத்தறிவித்தவன் இறைவன்'
எம் ஆசிரியர்களே..
உம்மை அர்ச்சனை செய்ய
நாங்கள் காத்திருக்கிறோம் !
தயவு செய்து தரமற்றதை தந்து
தட்சணை பெற்றுக் கொண்டும்
தண்டிக்காதீர் !

விஞ்ஞானிகளை கொண்டு
விண்ணை பிறகு
ஆராய்ந்து கொள்ளலாம்..
முதலில்
நம் குழந்தைகளின் உள்ளத்தில்
குப்பை கொட்டுவதை
நிறுத்துங்கள் !

எல்லோருக்கும்
எட்டக் கிடைக்க வேண்டிய
நல்ல கல்வி
பண விட்டத்தில் அல்லவா
படுத்துத் தூங்குகிறது!

கலைமகள் மீட்டும்
வீணையை பழக
குபேரன் வீட்டு
அந்தப்புரத்திலா
அனுமதிச் சீட்டு
வாங்க வேண்டும்?

கல்விப்பால் அருந்திய
பிள்ளைகள் கூட
வேலைக்காக திருவோடு ஏந்தி
திரிகின்றார்களே !
பாற் கடலிலுமா பஞ்சம்??

கலைமகள் துகில் உரியும்
வியாபார துச்சாதனன்களை
வீழ்த்துவதற்கு
பீமனின் 'கதை'களை
பழுது பார்ப்போம்.

கொள்ளை அடித்த பணத்தில்
கல்லூரி நடத்தும்
கௌரவர்களை சாய்ப்பதற்கு
கல்வி எனும் காண்டீபத்தில்
சீர்திருத்த நரம்பு
சேர்க்கப்படட்டும் !

பௌர்ணமி இரவு
பின்னுகின்ற பாம்பு போல
பயனுறு கல்வி
அறிவையும் மனதையும்
பின்னித் திளைக்கட்டும்!

ஊன அறிவை பிரசிவிக்கும்
மலட்டு மகரந்தங்களை
தொலைத்து விட்டு
வெளிச்ச்ப் பூக்கள் மலர்வதற்கு
அக்கினி மகரந்தம்
சூல் கொள்ளட்டும் !

அப்படியும்
வியாபார மோகம்
தொடரும் என்றால்...

வேறு வழியே இல்லை..

தளை(லை)களை சாய்ப்பதற்கு
நம் விரல்கள் அனைத்தும்
பரசுராமனின் கோடரிகளாய்
மாறிவிடட்டும்!

'அப்போதுதான் கல்வித் திருமகள் விழா
ஆயுத பூஜை
என்று அழைக்கப்படுவது
அருத்தப்படும் !'

இப்படிக்கு,
விவேக்.செ
(கட்டிடப்பொறியியல் மாணவன்- இறுதியாண்டு,
முனைவர்.மகாலிங்கம் பொறியியல் கல்லூரி,பொள்ளாச்சி.


நன்றி

எழுதியவர் : விவேக்.செ (15-Nov-14, 7:26 pm)
பார்வை : 118

மேலே