ஒரு விவசாயின் கவலை
பொன் விளையும் பூமியெல்லாம்
பாளம் பாளமாய் வறண்டுக் கிடக்குது.
பொலிவிழந்த விழிகளோ - தூரப்
பார்வையில் விண்ணில் விதைத்த
பன் நீர் மழையைத் தேடுது.
வறுமைப் போர்வையில் - ஏழையின்
வயிறு சூடேறிக் கிடக்குது.
அருமையான நிலத்தடியில் - நீண்டக்
கருமையான கோடுகள் தெரியுது.
கடுமையான பஞ்சம் வந்து
கால்பதிக்கப் பார்க்குது.- அக்
கதிரவனும் சூடேற்றி காய வைக்குது.
கம்பம் சோளம் எல்லாம் - நிழல்
பிம்பம் போல் மறைந்துப் போகுது.
பனை ஓலைக் குடிசையில்
பானைகளும், நெருப்பு உலைமீது
பொங்கு சோறு தாராமல்
பொம்மைக் கொலுவாய் ஆனது.
சட்டிப் பானைக் கையில் எடுத்து
சாதம் கேட்டு பிச்சைக் கேட்க உதவுது.
சாத்தானும்,கூத்தானும் - ஏழை
சாதியை ஆட்டிப் படைக்குது
விவசாய நிலமெல்லாம் - ஒரு
விலைப் பேசி வெற்றிடமாய்
நிலைக்கு மாறும் நிலையாச்சு.-இதில்
நிலைக்கெட்டக் குடும்பமாய்
நாங்களாச்சு.- எலும்பும் தோலும்தான்
எங்களுக்குள் மிச்சமாச்சு.
நம்பிக்கை இருந்தால் வாழலாம் என்று
தன்னம்பிக்கைத் தருவோரே - எங்களை
தத்து எடுத்தால் மட்டுமே வளர்வோமே.
பெத்து எடுத்தப் பிள்ளைங்கக் கூட
பொத்து பொத்து என்று மாண்டுதான்
போனார்களே.
ஒத்தை திரி விளக்கில் - நாங்கள்
ஒண்டியாய் ஓட்டைக் குடியில்
ஓலமிட்டு கோலமிட்டு வாழுறோமே.
ஒங்களுக்கெல்லாம் எங்களது
ஓல அவலங்கள் கேட்கலையோ.
ஒரு ஜென்மத்தின் வேதனையை
ஒளிர்ந்துக் காட்டாவா பிறந்தோம்.
மிளிர்ந்து மினுமினுக்கும்
மானுடமே! - நாங்களும்
மனிதர்கள் தானே. - எங்களுக்கு
மச்சுவீடு, மெச்சும் வீடு வேண்டாம்.
மனம் இறங்கி - எங்களுக்கும்
மறு ஜென்மம் தாருங்களே.-உங்களால்
புனர் ஜென்மம் நாங்கள் ஆவோமே.