ஒரு பட்டாம்பூச்சி , ஒரு நிலாத்துண்டு

ஒரு பட்டாம்பூச்சி
தன் கண்களால்
எனைக் கைதுசெய்து
அதன் இதயத்தில்
சிறைவைத்து
என்றென்றைக்கும்
வெளிவரமுடியாத படிக்கு
இமைக் கம்பிகளை
காவலுக்கிட்டிருக்கிறது!
ஒரு புள்ளிமானொன்று
உறுமும் புலியென
உலவிக் கொண்டிருந்தவனை
அசைபோடும் மானென
தன் நினைவுகளை
அசை போட வைத்து
துள்ளியோடிக் கொண்டிருக்கிறது !
ஒரு நிலாத் துண்டு
கொடும் சூரியனாய்
தகித்துக் கொண்டிருந்தவனின்
நிலத்தில்
நிலவினை விதைத்து விட்டு
முளைக்கும் பிறை நிலாப்
பயிர்களில் -
பௌர்ணமிப் பூக்களை
பறிக்கச் சொல்லி
நட்சத்திரங்களை
காவலுக்கு வைத்துவிட்டுச்
சென்றிருக்கிறது !
ஒரு மழைத்துளி
காற்றாற்று வெள்ளமாய்
கரைபுரண்டோடியவனை
தன் காதலெனும்
கமண்டலத்திற்குள்
அடைத்து வைத்து
நெஞ்ச பூமியின்
வளங்களை
வளப்படுத்துவது பற்றி
வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறது !
ஒரு பூங்காற்று
சூறாவளியாய்
எட்டுத்திக்கும்
சுழன்றடித்தவனை
பூந்தென்றலாய் மாற்றி
ஆயுளுக்கும்
தன் குயில்தோப்பின்
கூடுகளுக்குச்
சாமரம் வீசச் சொல்லி
சட்டம் இயற்றியிருக்கிறது !
ஒரு அரும்பு
கள்ளம் நிறை
இரும்புக்காடாய்
இருந்தவனை
வெல்லம் நிறை
கரும்புக்காடாய் மாற்றி
இனிப்பினை பாசனம்
செய்து -
மகிழ்ச்சியினை
அறுவடை செய்யும்
மகத்துவம் சொல்லித் தருகிறது !
காதல் தேசத்தில்
பட்டாம்பூச்சி ,மான் , நிலாத்துண்டு
மழைத்துளி , பூங்காற்று
இவைகளெல்லாம்
இத்துணை ஆதுரமானதா ?