மொழி எங்கள் மூச்சாகும்
தீங்கொன்று தமிழ்த்தாய்க்கு வருகு தென்றால்
தேவையில்லை உயிரெமக்கு உயிரை ஈந்தும்
ஓங்குதமிழ் மொழிகாப்போம் ! உணர்ச்சி யின்றி
உலுத்தர்களாய் செயலற்று இருக்க மாட்டோம்!
வீங்குதோழ் படைத்தவர்கள் தமிழர் நாங்கள்
வீணர்கள் எவரேனும் தமிழை மாய்க்க
ஈங்கெங்கும் வருகின்றார் என்றால் தமிழன்
எதுவரினும் விடமாட்டான் :வெற்றி காண்பான் !
மொழிஎங்கள் மூச்சாகும் ; மொழியின் மீது
முறைதவறி கெடுமதியார் கையை வைத்தால்
ஒழிக்கவரும் அன்னவரை தடுத்து நிற்போம்
உயிர்போனால் அதுவேஎம் பெருமை என்போம் !
வழிவழியாய் எம்மக்கள் காத்து நித்தம்
வளர்த்தமொழி வண்ணத்தமிழ் மொழியே ! அதனை
அழியென்று வருவோரை விடவே மாட்டோம்
அன்னைத்தமிழ் வாழ்வாங்கு வாழ வைப்போம் !