சிணுங்காத கைபேசி -ரகு

திடீர்ச் சக்கரமுறிவில்
உயிர் உறைந்து நின்றேன்
என் வண்டியின்
பின்சக்கரம்
சுழன்று சறுக்கி
என்கால் தாங்கலில்
நேர்நின்றது

இமைபனிக்க நிமிர்ந்தேன்
மயிலிறகில்
என் உயிர்தவறவிட்ட
குப்பை லாரியொன்று
குலைநடுங்கும்
அலறலோடு
கடந்துபோனதென்னை

" இவனெல்லாம்
குப்பை லாரியில்
அடிபட்டுத்தான் சாவான்"
யாருடைய சாபமோ

என்று
எல்லாம் முடிந்தபிறகு
யாரேனும் முனுமுனுக்கும்படி
ஆகியிருக்குமென் நிலைமை

தப்பித்திறங்கி
வண்டியைத் தள்ளிக்கொண்டு
போகும்போது
லாரியின் பின்பகுதி
விகாரமாய்ச் சிரித்தது
என்னைப்பார்த்து

அதன்பிறகு
மெத்தனமாகவே சுழன்றன
என்
வாகனச்சக்கரங்கள்
மொத்தக்குடும்பத்தையும்
கண்முன் கொண்டுவந்து !

இப்போதெல்லாம்
சிணுங்குவதேயில்லைக் கைபேசி
என் சாலைப்பயணத்தில்!

எழுதியவர் : அ.ரகு (20-Nov-14, 8:33 pm)
பார்வை : 79

மேலே