நேற்றும் இன்றும்

நேற்றும் இன்றும் .
உரசி ஓசையெழுப்பும்
மூங்கில் காடுகளில்
சாம்பல் உதிர்க்கும்
சிகரெட் நுனிகள் .
கவிதைக்காகக் காத்திருந்த
மனத்தில் கலைந்த சொற்றொடர்கள்
கோடுகள் விரவி ஓவியம் மலரும்
கேன்வாஸின் கிழிசல் .
மறையும் நேரத்தில்
ஆதித்தியன் கோபம்
இளங்காற்றின் இறுகிய
தழுவலில் இளகிய விந்தை .
ஜன்னலிற்கு வெளியே
குதிக்கும் குரல்கள்
கிளைகளின் முறிவால்
உதிர்ந்த இலைகள் .
கால இடைவெளி
பிசகிய கணக்கால்
சிட்டுக் குருவிகள்
தனித்தனிக் கூட்டில் .
வெள்ளைச் சுவர்களில்
சிலந்தியின் பின்னல்கள்
இரையாக்க் காத்திருக்கும்
இறகிழந்த பூச்சிகள் .
தொடுதலின் விளைவால்
தொலைந்திருந்த உணர்வுகள்
அறுந்த தந்தியிலும்
அற்புத நாதங்கள் .
ஒவ்வொன்றினுள்ளும் ஒவ்வொரு குறைகள்
ஒவ்வாத நிலையிலும் பிணையும்
எலும்புகள்
சிறகுகள் முறிந்த பின்னும்
மிதக்கும் குதிரைகள் .
வட்டமிட்டு வட்டமிட்டும்
இரை கிடைக்காக் கழுகின் சோகம்
ஒரு புறாவின் அலகால்
விலகியது யாவும் .

[ கணையாழி நவம்பர் 2013 ] இதழில் வெளி வந்த என் கவிதை .

எழுதியவர் : சுப்ரா (23-Nov-14, 7:26 pm)
சேர்த்தது : வே . சுப்ரமணியன்
Tanglish : netrum intrum
பார்வை : 80

மேலே