செருப்புகள் பேசினால்

செருப்புகள் பேசினால்
இப்படித்தான் பேசுமோ ...?

செருப்புகள் நாங்கள்...
இணைந்தஜோடி.
எப்போதும்
இணைபிரியாதஜோடி!

ஒருதரஜோடிஎன்றால்
உலகிலேயே
நூற்றுக்குநூறுசதம்
அதுநாங்கள்தான்.
எங்களுக்கு மிஞ்சியஜோடி
இல்லவேயில்லை !

செருப்புஜோடிதான்
சிறந்தஜோடி என்று
ஜெகமேகூறும்.


ஒரே நிறம்
ஒரே அளவு
ஒரே கனம்
ஒரேஎடை
ஒரேமாதிரி என்றால்
அது நாங்களே நாங்கள்தான் !

நாங்களும்
நாய்களைப்போலவே
விசுவாசமானவர்கள் !
காலடியிலேயே
காத்துக்கிடப்போம் !

சமயங்களில்
எங்கள் எஜமான்கள் தான்
எங்களை
மறந்து விட்டுவிடுவார்கள் .

கல்லிலும் -முள்ளிலும்
காலடியில் கிடந்தது
மனிதர்களை
காவல்காக்கும்
நாங்கள்
பாதுகாவலர்கள் போன்ற
பாதக்காவலர்கள்!

காடுமேடுகளிலும்
வீதிவெளிகளிலும்
மனிதர்களை
தூக்கு தூக்கென்று
தூக்கித்திரியும்
தூக்குத்தூக்கிகள் நாங்கள்!

எங்களை
வாங்கிய எஜமான்களுக்கு
வஞ்சகமில்லாமல்
தேய்ந்து -மெலிந்து
அறுபடும்வரையிலும்
ஆகாதவரையிலும்
அயராதுழைப்போம் !

மனிதர்கள்
சந்தர்ப்பவாதிகள் ..
எங்களை
சமயங்களில்
கழட்டிவிட்டு விடுகிறார்கள் !

வாசல்வரை தான்
எங்கள் சேவை
மனிதருக்குத் தேவை
அதற்குமேல் நாங்கள்
அனுமதிக்கப்படுவதில்லை .
அதுதான் பெருத்த அவமானம்!
அதனால்தான்
நாங்களும் சமயங்களில்
வார் அறுந்து
பதிலுக்குப்பதில்
பழிவாங்கிவிடுகிறோம் .


வைபவங்கள் ..
கோவில்கள் -என்று
மக்கள் கூடுகின்ற
கூட்டங்களில் எல்லாம்
எங்களை
கொள்ளை யடிப்பதற்கென்றே
ஒருகூட்டம் இருக்கிறது ..
அதுதான் வெட்கம் !


எங்களுக்கு ஒருவருத்தம்
மனிதர்கள்
ஒருவரைஒருவர்
அவமானப்படுத்த
எங்கள் பெயரையும்
எங்களையும் பிரயோகிப்பது
மிகமிகதப்பு !

எங்களுக்கு
செருப்பு -மிதியடி
பாதக்குறடு -என
பெயர்கள் பலஉண்டு !
அவையெல்லாம்
பொருந்தாப்பெயர்கள்
எங்களுக்கு
'பாதப்பல்லக்கு 'என்னும்பெயரே
அருமையான பொருத்தம் .
அப்படியே அழையுங்கள் !

எழுதியவர் : அண்ணாதாசன் (23-Nov-14, 11:48 pm)
பார்வை : 345

மேலே