நகம் கீறும் ஹைக்கூ
என் தேசத்து
மழையெல்லாம்
நீயானால்,
குடை மறந்த
என் தேகம் என்னாகும்........
துளி வரைந்த
வெளிர் நிறங்களில்
சுளீர் கனவென
உன் கூந்தல்......
பந்தல் நிழலென
பகல் மறக்கும்
என் விழிகள்....
சங்கு கழுத்தில்
சக்கரை நிறத்தில்
குங்கும இதழ் கொண்ட
தேவதை நீ .....
தேக வதை செய்வதில்
மிச்சம் இருக்கும்
இதழோர மச்சமும்
பின் கழுத்து மிச்சமும்....
அச்சமின்றி அரவணைக்கும்
உச்சம் கொண்ட
இச்சைப் பூக்கள்
முயல் தேச புன்முறுவல்கள்....
தத்தித் தாவும் புன்னகையில்
கத்தும் ஆழ் மனதில்
வெண் மகம்....
என் தாகம் தீர்க்கும்
முத்தமழை
பெண் யாகம் நடத்தும்
ஜென் தத்துவம்.....
விரலும் விரலும்
விதி மாற்றும்...
விழியில் விளைந்த
பிழை காற்றும்.....
முன்னிரவு என்னிரவு
உன்னிரவு பின்னிரவு....
விடியல் வாசல்
வழி மறைக்கும்-நம்
ஆடைகள் தன்னிறைவு....
சாத்திரம் உடைத்த
நகங்களில்
கீறிக் கிடத்தல்
ஹைக்கூ.....
பாத்திரம் நிறைந்த
யுகங்களில்
தலைக் கோதிக் கிடத்தல்
லிமரைக்கூ......
கவிஜி