கௌரவ அகதிகளே – கே-எஸ்-கலை

செத்தவரை
நினைத்துப் பார்க்கும்
நெஞ்சங்களில்....
கொஞ்சமேனும் ஈரமிருந்தால்
வாழத் துடிப்போரின்
வாதைகளும் வாட்டங்களும்
ஞாபகத்திற்கு வாராதோ ?

இழிவின் இழிவென
இனத்தின் பிணத்தையே
தின்றுச் செரிக்கின்ற
கரையானினக் குடும்பமாய்
காலம் பொருள் சூட்டுகிறது
தமிழனுக்கு !

கனடாவில் கணபதிக்கு
பளிங்குச் சிலைவைத்து
கருங்கல்லில் கோவில்கட்டி
கடவுளுக்கே வரம்கொடுக்கும்
சுகபோக வைபோகம்....

உயிர் கசியும் உறவுகளின்
ஓட்டைக் குடிசைகளுக்கு
கதவு வைத்துக் கொடுப்பதற்கு
ஐநாவின் உதவிகேட்டு
ஆயிரம் போராட்டங்கள்....!

போராட்ட தாகமெல்லாம்
ஒரு கோப்பை வைன்
அருந்தியபின் ஆறிப்போவது
ஆற்றாமையின் ஆற்றாமையே !

புலம்பெயர் தேசங்களில்..
இருப்பைத் தக்கவைக்கப்
போராடுகின்ற
கௌரவ அகதிகளே....

இங்கே எரிகிறது என்று
சொல்லிச் சொல்லியே
அங்கே குளிர்க்காய்கின்ற
அயோக்கியத்தனம்
அபத்தம் ! அசிங்கம் !

உங்கள்
ரத்தச் சொந்தங்களின்
உடலங்கள் வடித்த
ரத்தச் சகதியின்
ஈரமும் வாடையும்
இன்னும் இங்கு காயமில்லை....

சாகக் கிடப்பவனுக்கு
ஒரு வாய்
தண்ணீர் கொடுக்க
வக்கில்லாத நீங்கள்...
செத்துப் போனவர்க்கு
விழா எடுத்து
என்ன செய்யப் போகிறீர்கள் ?

-----------------------------------------------------------------
"விதிவிலக்கானவர்கள் விலக்கலாக "

எழுதியவர் : கே.எஸ்.கலை (26-Nov-14, 8:28 am)
பார்வை : 226

மேலே