மீண்டுமெழுந்து வாயேன்டா - தமிழன் பரிதி வருங்கால உழவன்
"மீண்டுமெழுந்து வாயேன்டா..!" - தமிழன் பரிதி வருங்கால உழவன்
உரமாகிப் போனவரே
ஓங்கதையக் கேக்கயில
ஐயமொன்னு எழும்புதய்யா...
பிறக்கயில் நீ அழுதாயா?
ஒரஞ்சு வயசினில
தாய்ப்பால மறக்கயில
தமிழெடுத்து ஊட்டியதார்?
மீண்டும் வந்து சொல்லிடய்யா!
ஈரஞ்சு வயசினில
இருளாடும் வேளையில
தாய்ப்பின்னே ஒளிஞ்சதுண்டா?
சத்தியமாச் சொல்லிடய்யா!
மூவஞ்சு வயசினிலே
மீச கொஞ்சம் அரும்பயில
இளசுகளப் பாத்ததுண்டா?
காதல் வழிப் போனதுண்டா?
நாலஞ்சு வயசினில
தகப்பனத்தான் மொறச்சுகிட்டு
நண்பனோட போனதுண்டா?
நாலுசுகம் கண்டதுண்டா?
ஐஐஞ்சு வயசினில
ஐயா உன் பார்வையில
பட்டதெது சொல்லிடய்யா?
மாவீரனாகிப்புட்ட!
ஆறஞ்சு வயசுக்குள்ள
ஐயா நீ மண்ணுக்குள்ள,
ஓஞ்சொந்தம் கண்ணுக்குள்ள...
வெளக்கா நீ சுடரும்விட்ட!
ஏழஞ்சு வயசுவர
ஐயா நீ இருந்திருந்தா
ஈழமதப் பாத்திருப்ப!
வீரக்கத கதைச்சிருப்ப!
எட்டஞ்சு வயசினில
நம் தலைவர் கையினில
வீரமகன் நீயென்று
விருதுகூட வாங்கிருப்ப!
மண்ணுக்குள் நீ கெடந்தா
எம்மை இங்கு ஆள்வது யார்?
ஈழம் நாளை உறுதியென்று
நம்பியவர் பலரானோம்
எழுந்து கொஞ்சம் வாயேன்டா...
எங்கூட பாடேன்டா...