பொய்களின் நடுவே
நான் வெறுக்கிற ஒரு ஆண் !
நம்பிக்கைக்கு உரியவளாய் இருந்த,
என் எண்ணங்களை உரியாய் அடித்தவன் !
உலகமே அவன் என்றிருந்தேன்,
இன்று நினைக்கிறேன்,
என் உலகத்துக்கே அவன் வேண்டாமென !
நெஞ்சம் நிரம்பி வழிகிறது,
அவன் கால்கள் மிதித்த மிதிகளும்,
கவனம் சிதைத்த இடிகளும்,
நம்பியிருந்தவளை,
மின்சாரக்கம்பியில் போட்டான் !
வெந்துகருகி வெடித்துச்சிதறி,
சங்கினில் அள்ளும் சாம்பலானது இதயம் !
என்ன சொல்லி என்ன செய்ய,
மோசடியின் பிடியில் வாழ்க்கை,
வேசதாரியின் நிழலில் காதலில் !
மிகையில்லாமல்,
வெட்டியானாய் எரிக்கிறான்,
உயிரோடு உணர்வோடு என்னை !
நம்பினேன் நாடகமாடினான்,
வெம்பினேன் விளக்கங்கள் சொன்னான் !
அவனருகில் இருப்பது ஒரு மாயப்பிடி,
விலகி ஓடிட எத்தனிக்கிறேன்,
எப்பொழுதும் தோற்கிறேன்,
நிதர்சனமாய் உணர்கிறேன்,
நீர்த்துப்போய் உறைகிறேன்,
அவன் பொய்யன்,
காதலெனும் பெருந்தீயில்,
எனை கருகவைத்து குளிர்காயும்,
கருணையில்லா பெரும் அரக்கன் !
சுந்தரமாய் இருந்த நாட்களை,
சுத்தமாய் சூனியமாக்கியவன் !
எப்படியும் விடுபட இயலாது !
சிறுகச்சிறுக சாகவேண்டியதே மிச்சம்,
அதுவரையில் தேமே என நடக்க சித்தமாகவே மதி !
அவன் கம்பளமாய் விரிக்கும் மாபெரும் பொய்களின் நடுவே !!