காற்றில் மிதக்கும் இறகு - தேடல் 3

ஒரு பறவையின் சிறகிலிருந்து
பறவைக்கே தெரியாமல்
பத்திரமாய் படியிறங்கியது
உதிர்ந்து போன
அந்த ஒற்றை இறகு

உதிர்த்தலின் விதிப்படி
அந்த இறகு
அனாதையாகிவிட்டதென்று
பறவை நினைத்தது

உயிர்த்தலின் விதிப்படி
விடுதலைப் பெற்றதாய்
அந்த இறகு நினைத்தது

சுதந்திரம் என எண்ணி சுகமாக
காற்றில் மிதந்த இறகு
கடைசியாய் சேர்ந்த இடம் மலம்
மலம் என்றால் மனித கழிவு

மனந்தளராத இறகு
கழிவுகளோடும்
கனவுகளோடும் பயணப்பட்டது
கடலுக்கு

கடக்கும் வழியெல்லாம்
கலந்துக்கொண்டே இருந்தது
கழிவுகள்

தூரத்துச் சொந்தமாய் தொழிற்சாலைக் கழிவு
அடுத்தவீட்டுக் காரனாய் அணுக்களின் கழிவு
கடங்காரனாய் கதிரியக்க கழிவு

முகம் சுளித்தது இறகு
மனித கழிவுகளைக் கண்டுஅல்ல
மனிதனே கழிவுகளென்று

ஒரு சூறைக்காற்றில்
சுனாமி அடித்த
சுடுகாட்டுக் கடற்கரையில்
சுற்றி விழுந்தது இறகு...

சுயநினைவுப் பெற்று பார்த்தபோது
சுற்றி இருந்த மனிதர்கள்
இல்லை
சுற்றிலும் இறந்த மனிதர்கள்

அப்பாவி உயிர்களின்
ஆயுள்ரேகைகளை அழித்த
அகங்காரம் கொண்ட அலைகளைப் பார்த்து
அச்சத்தில் அழுதது இறகு

தன்னைத் தவிர
தண்ணீரையும் தவிர
வேறெதுவும் அசையாமல் கிடந்ததைக் கண்டு
இறகின் கண்ணீர் இரட்டிப்பனாது

இயற்கையை அழிக்கிறார்கள் மனிதர்கள்
மனிதர்களை அழிக்கிறது இயற்கை
இது ஏதோ
கொடுக்கல் வாங்கலின் குறைபாடு என
குழப்பத்தில் தவித்தது இறகு

அங்கு
அசையும் நிலையில்
இறகு மட்டுமே இருந்தது
அசைக்கும் நிலையில்
அலைகள் மட்டுமே இருந்தது

அசைத்தது அலை
அதில் அசைந்தது இறகின் நிலை

பிடிப்பட்ட மனிதர்களோடும்
அடிப்பட்ட மீன்களோடும்
இடிப்பட்டுக் கொண்டே மிதந்து
இழுக்கப்பட்ட இறகு

மனிதர்களுக்கு உணவாகும் மீன்களுக்கெல்லாம்
மனிதர்களே உணவாகிப் போன
மாற்றம் கண்டு
மயக்கம் வந்தது இறகிற்கு

மயக்கம் தெளிந்து
இறகு எழுந்த போது
எல்லாம் அடங்கி இருந்தது
அதற்குள்
எல்லாமே அடங்கி இருந்தது

நிவாரணக் கணக்கில்
இறப்பும் இருந்தது
இறகும் இருந்தது
அப்போதுதான்
மனிதர்களைப் பற்றி இறகிற்கு
முழுமையாக புரிந்தது

===================== ஜின்னா =================

பின் குறிப்பு:

தோழர் குமரேசன் கிருஷ்ணன் இதே தலைப்பிற்கு ஏற்கனவே இரண்டு கவிதை எழுதிஉள்ளார் (கவிதை எண்: 208211, 220283).
அவர் வேண்டுக்கோளுக்கிணங்க "காற்றில் மிதக்கும் இறகு" என்ற தலைப்பிற்கு நானும் எழுதிய படைப்பு இது...

அவர் கேட்டுகொண்டதற்கிணங்க (அவர் எண்ணத்தில் "14224")
எழுதியது இந்த கவிதை...

தளத் தோழர் / தோழமைகள் யார் வேண்டுமானாலும் எழுதலாம் இந்த தலைப்பிற்கு...

எழுத ஆர்வம் / விருப்பம் உள்ளவர்கள் அவரின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்..
அவர் சூழ்நிலைகள் / கரு தருவார்... ஆனால் தலைப்பு அதேதான்...
அதாவது "காற்றில் மிதக்கும் இறகு"

தங்களுக்கு கரு இருந்தால் அவரிடம் சொல்லலாம்.. அதுவும் ஏற்றுக் கொள்ளப் படும்...

வாழ்த்துக்கள் தோழர்களே / தோழமைகளே...

இப்படிப்பட்ட நல்ல இணக்கமான சூழ்நிலைகளை வரவேற்கிறேன்...
தமிழோடு சேர்ந்து நாமும் வளர்வோம்...

எழுதியவர் : ஜின்னா (5-Dec-14, 12:05 am)
பார்வை : 5365

மேலே